UPDATED : ஜன 03, 2024 12:24 PM
ADDED : ஜன 03, 2024 12:21 PM
கி.கிரியில் கம்யூ., தலைவர்
சங்கரய்யாவின் படத்திறப்பு
கிருஷ்ணகிரியில், கம்யூ., தலைவர் சங்கரய்யா படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரியில், விடுதலை போராட்ட வீரரும், கம்யூ., கட்சி தலைவருமான சங்கரய்யாவின் படத்திறப்பு விழா நேற்று நடந்தது. சி.பி.எம்., மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,வும் மாநிலக்குழு உறுப்பினருமான டில்லிபாபு ஆகியோர், சங்கரய்யாவின் படத்தை திறந்து வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாநிலக்குழு உறுப்பினர் சாமிநாதன் பேசினார்.
ஐயப்ப சுவாமி பல்லக்கு ஊர்வலம்
தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவிலில், ஐயப்ப சுவாமி சன்னதி உள்ளது. இங்கு, 56ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் மற்றும் ஐயப்ப சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மஹா மங்களாரத்தி
நடந்தது.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஐயப்ப சுவாமி உற்சவரை அமர்த்தி, பல்லக்கு ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் சுவாமி பாடல்களை பாடியபடி சென்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ.6.35 லட்சத்தில் சாலை பணி
தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., 1வது வார்டுக்கு உட்பட்ட மேல்கோட்டை பகுதியில், 6.35 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, தலைவர் சீனிவாசன் பூஜை செய்து துவக்கி வைத்தார். செயல் அலுவலர் மனோகரன், டவுன் பஞ்., துணைத்தலைவர் அப்துல்கலாம், கவுன்சிலர் மெகமத்ஷெரிப் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிணற்றில் மூழ்கி விவசாயி பலிதேன்கனிக்கோட்டை அருகே சின்ன உள்ளுகுறுக்கையை சேர்ந்தவர் கோவிந்தன், 42, விவசாயி; நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு விவசாய நிலத்திற்கு சென்றவர், அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்த பைப்பை எடுக்க குதித்தார். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வரவில்லை. ராயக்கோட்டை தீயணைப்புத்துறையினர் வந்து, கிணற்றுக்குள் மூழ்கி உயிரிழந்த கோவிந்தன் உடலை மீட்டனர். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தோப்பு முனியப்ப சுவாமி
கோவிலில் சிறப்பு பூஜை
தர்மபுரி அருகே, தோப்பு முனியப்ப சுவாமி கோவிலில் நேற்று, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தர்மபுரி, ஏ.கொல்லஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சந்தனுாரில் தோப்பு முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தோப்பு முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், சந்தனுார், குளியனுார், மொடக்கேரி, ஏ.கொல்லஹள்ளி, புதுார் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
5ல் விவசாயிகள்
குறைதீர் கூட்டம்
தர்மபுரி, ஆர்.டி.ஓ., கீதாராணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுத்தலின் படி, ஒவ்வொரு மாதமும் முதல்வாரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இந்த மாதம், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பகல், 11:00 மணிக்கு, தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக, குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆர்.டி.ஓ., தலைமையில் நடக்கவுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
பாலக்கோடு அரசு கல்லுாரி
ஹாக்கி போட்டியில் முதலிடம்
பெரியார் பல்லைக்கழக கல்லுாரி அளவிலான ஹாக்கி போட்டியில், பாலக்கோடு அரசு
கல்லுாரி முதலிடம் பெற்றது.
பெரியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லுாரிகள் அளவிலான ஹாக்கி போட்டி, சேலத்தில் கடந்த மாதம், 22, 23ல் நடந்தது. இதில், ஆண்கள் ஹாக்கி போட்டியில், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லுாரி அணி உள்பட, 10க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்குபெற்றன. இதில், ஆண்கள் ஹாக்கி போட்டியின், இறுதி போட்டியில், பாலக்கோடு அரசு கலைக்கல்லுாரி அணி முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லுாரி முதல்வர் பங்காரு மற்றும் உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள், ஹாக்கி யூனிட் ஆப் தர்மபுரி, பாலக்கோடு ஹாக்கி கிளப் ஆகியோர்
பாராட்டினர்.
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரி
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரசாரம்
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வழங்க வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் நல கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. ஜன., 5ல் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கோரி, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தர்மபுரி மாவட்டம், அரூர் தற்காலிக பஸ் ஸ்டாண்டில், 3வது நாளாக பிரசார இயக்கம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ரகுபதி, கோவிந்தன், ஐ.என்.டி.யு.சி., காந்தி உள்ளிட்டோர் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினர்.
சிறுத்தை கடித்து 4 ஆடுகள் பலி
மகேந்திரமங்கலம் அருகே சிறுத்தை கடித்து, 4 ஆடுகள் பலியானதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சிவராஜ், 40, விவசாயி; இவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ஆட்டுப்பட்டியில் இருந்து, ஆடுகள் அலறும் சத்தம் மற்றும் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், வெளியே வர அச்சப்பட்ட சிவராஜ், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். உடனே, 10க்கும் மேற்பட்டோர் வந்ததால், அங்கிருந்த சிறுத்தை, வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
பின்னர், ஆடுகள் அடைக்கபட்டிருந்த பட்டிக்கு சிவராஜ் சென்று பார்த்தபோது, 4 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது தெரியவந்தது. இது குறித்து அவர், பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடம் வந்த வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள், இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை வந்து சென்றதால், அப்பகுதி மக்கள் மத்தியல் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வரட்டாறு தடுப்பணை பூங்காவை
சீரமைக்க மக்கள் வேண்டுகோள்
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், கடந்த, 2007ல் வரட்டாறு தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதன் அருகில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், அதன்பின், பூட்டியே கிடக்கிறது.
விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்கள் குழந்தைகளுடன் தடுப்பணையை சுற்றி பார்க்க வரும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பூங்கா பூட்டியே கிடப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும், பூங்கா முழுவதும் பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளதுடன், பூங்காவில் இருந்த மின்விளக்குகள், சிலைகள், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது.
எனவே, பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை மீண்டும் சீரமைப்பதுடன், தடுப்பணையில் படகு சவாரி ஏற்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க., அரசை கண்டித்து
அ.தி.மு.க., வாயிற்கூட்டம்
தர்மபுரி, பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன், மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கண்டன வாயிற் கூட்டம், மண்டல செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடந்தது.
இதில், 2021 முதல், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படவில்லை. மேலும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு டி.ஏ., உயர்வும் வழங்கவில்லை. பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, வாராந்திர ஓய்வு வழங்க வேண்டும். தி.மு.க., அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியின் படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவித்த சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
சேலம் கோட்டத்தில் பணிபுரியும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு வழங்கப்படும் தொடர் பணிச்சுமையை குறைக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரையும், தொடர்ந்து மனஉழைச்சலுக்கு ஆளாக்கும் இந்த, தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் உள்பட பலர்
பங்கேற்றனர்.
பொது கிணற்றில் பிளாஸ்டிக் கழிவு
நிலத்தடி நீர் நஞ்சாகும் அபாயம்
பொது கிணற்றில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை, பஞ்., நிர்வாகம் கண்டு கொள்ளாததால், நிலத்தடி நீர் நஞ்சாகும் அபாயம் உள்ளதாகவும், எனவே, கிணற்றை சுத்தம் செய்ய வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதேமங்கலம் பஞ்.,ல் வெங்கடம்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள பஞ்., அலுவலகத்தின் பின்புறம், 50 ஆண்டுகளுக்கு முந்தைய பொதுக்கிணற்றில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. வெங்கடம்பட்டி பகுதி பொதுமக்களுக்கு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு முன், இந்த கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கிணற்றில் இன்று வரை தண்ணீர் உள்ள நிலையில், பஞ்., நிர்வாகத்தின் மெத்தன போக்கால், கிணறு பயன்பாட்டில் இல்லை. இதனால், அப்பகுதியிலுள்ள கழிவுகள், பொது கிணற்றில் கொட்டபட்டு, தண்ணீர் மாசுபட்டுள்ளது. மேலும், இங்குள்ள நிலத்தடி நீர், நஞ்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுகிணற்றை சுத்தம் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.7.55 கோடி வளர்ச்சி திட்ட
பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில், 7.55 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இது குறித்து, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளி மேம்பாட்டு மானியம்- மூலதன பணி திட்டத்தில், 15 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளை, 6.45 கோடி ரூபாய் மதிப்பிலும், இயக்கம் மற்றும் பராமரிப்பு பணி திட்டத்தில், 11 பள்ளிகளில் உணவு உண்ணும் கூடங்கள், கழிவறைகள், குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள், மேற்கூரை பழுது பார்த்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவை, 1.10 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளுக்கு வரும், 19ல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன. இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை
முடிந்து பள்ளிகள் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறைக்குப்பின் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
பள்ளி மாணவ, மாணவியருக்கு கடந்த 23 முதல் ஜன.,1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த, 4 மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,144 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள், 127 தனியார் பள்ளிகள் என மொத்தம், 1,285 தொடக்கப்பள்ளிகள், 100 நடுநிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அதேபோல, 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையுள்ள, 273 அரசு பள்ளிகள், 144 தனியார் பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி உள்பட, 425 பள்ளிகளை சேர்ந்த, 1 லட்சத்து, 60 ஆயிரத்து, 199 மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கும், நேற்று முதல் வகுப்புகள் துவங்கின. விடுமுறைக்கு பின், பள்ளி வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மலர், இனிப்பு கொடுத்து
வரவேற்றனர்.
பைக் கவிழ்ந்து விபத்து
கூலித்தொழிலாளி பலி
தெலங்கானா மாநிலம், சலீம் நகர் அடுத்த பாபுபேட்டையை சேர்ந்தவர் மாணிக்கம், 37, கூலித்தொழிலாளி; இவர், தன் சொந்த வேலைக்காக கடந்த டிச., 31ல் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் கிருஷ்ணகிரி நோக்கி வந்துள்ளார். இரவு, 7:30 மணியளவில், வி.மாதேப்பள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இறந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
3 நாள் தொடர் விடுமுறை மாணவர்களின்
விபரங்களை தெரியப்படுத்த அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக, மாவட்ட அளவிலான, மூன்றடுக்கு குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த, 2023 ஆக., 1 முதல் நடக்கிறது. இதில், 14,842 மாணவர்களை கள ஆய்வு செய்து, அவர்களில், 2,313 மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாணவர்களையும் பள்ளியில் பயில வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
குடும்ப சூழல் காரணமாக, இடைநின்ற மாணவர்கள், கஸ்துாரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஸ்கா வித்யாலயா ஆகிய உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத குழந்தைகளை கண்காணித்து, அவர்கள் விபரங்களை தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.