ADDED : ஜூன் 17, 2024 01:46 AM
ஓசூர்: ஓசூர், பேகேப்பள்ளி எழில் நகரில், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், புதிய பாடசாலை திறப்பு விழா மற்றும் 12 ஜோதிர்லிங்க கண்காட்சி, துாய்மையான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்திற்கான ஆன்மிக அறிமுக நிகழ்ச்சி என, முப்பெரும் விழா நேற்று நடந்தது. மண்டல பொறுப்பாளர் சரோஜா தலைமை வகித்தார். ஓசூர் கிளைத்தலைவர் ராமலிங்கம், தொழிலதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஜி.எஸ்.டி., மத்திய கலால் வரித்துறை உதவி ஆணையர் ராஜேஷ், ஓசூர் பேகேப்பள்ளி பஞ்., தலைவர் அருண்குமார், பெங்களூரு சஞ்சய் நகர் சென்டர் பொறுப்பாளர் சோனி ஆகியோர், 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சியை திறந்து வைத்து பேசினர்.
பெங்களூரு ஏலஹங்கா சென்டர் பொறுப்பாளர் விஜயலட்சுமி பேசினார். கண்காட்சியில், சோமநாதர், மல்லிகார்ஜூனர், மகா காளேஸ்வர், ஓங்காரேஸ்வரர், கேதார்நாதர், பீமாசங்கர், கிருஷ்ணேஸ்வர், ராமநாத சுவாமி, நாகேஸ்வர், வைத்தியநாதர், திரியம்பகேஸ்வர், விஸ்வநாதர் ஆகிய, 12 ஜோதிர்லிங்கம் இடம் பெற்றுள்ளது. அவற்றை, பேகேப்பள்ளி, எழில் நகர் பகுதி மக்கள் வழிபட்டனர். இன்று (ஜூன் 17) கண்காட்சி இருப்பதால், பொதுமக்கள் நேரில் ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்யலாம் என, விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.