ADDED : ஜூன் 04, 2024 04:11 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., உத்தரவின்படி, ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 101வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு அடியில், கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து, மாநகர செயலாளர் மேயர் சத்யா தலைமையில், கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகரின், 45 வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர அவைத்தலைவர் செந்தில், பகுதி செயலாளர்கள் திம்மராஜ், வெங்கடேஷ், தொ.மு.ச., மாவட்ட அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் நேற்று முன்தினம் இரவு கருணாநிதி சிலைக்கு போடப்பட்ட துணி மறைவை தன் ஆதரவாளர்கள் மூலம் அகற்றி, நேற்று காலை கருணாநிதி சிலைக்கு மலர் அலங்காரத்துடன் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதில், தொ.மு.ச., மற்றும் தி.மு.க.,வினர், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
* ஊத்தங்கரை ரவுண்டானாவில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார்.