/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகள் வனப்பகுதி கிராமங்களை கண்டுகொள்ளாத மின்வாரியம் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகள் வனப்பகுதி கிராமங்களை கண்டுகொள்ளாத மின்வாரியம்
மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகள் வனப்பகுதி கிராமங்களை கண்டுகொள்ளாத மின்வாரியம்
மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகள் வனப்பகுதி கிராமங்களை கண்டுகொள்ளாத மின்வாரியம்
மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகள் வனப்பகுதி கிராமங்களை கண்டுகொள்ளாத மின்வாரியம்
ADDED : ஜூன் 04, 2024 04:12 AM
ஓசூர்: ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில், மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியுள்ள போதும், மின்வாரியம் அலட்சியமாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், யானை, காட்டெருமை, மான், மயில் உட்பட பல்வேறு வகையான வன உயிரினங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் அக்., மாதம் கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து, ஓசூர் வனக்கோட்டத்திற்கு, 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயருகின்றன. தனியார் விவசாய நிலங்களில் வைக்கப்படும் மின்வேலி மற்றும் மின் கம்பிகளில் சிக்கி, யானைகள் பலியான சம்பவம் கடந்த காலங்களில் நடந்துள்ளது.
குறிப்பாக கடந்த, 2022 நவ., மாதம், கடூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி குட்டி யானை உயிரிழந்தது. கடந்தாண்டு பிப்.,ல் கிருஷ்ணகிரி அடுத்த வெலகலஹள்ளியிலும், நவ., மாதம் தாவரக்கரை பகுதியிலுமுள்ள விவசாய நிலத்தில், மின்சாரம் தாக்கி ஆண் மற்றும் பெண் யானை பலியாகின.
இந்நிலையில், மின்கம்பங்களில் செல்லும் மின் கம்பிகளில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள், தற்போது ஓசூர் வனக்கோட்டத்தில் நடக்கிறது. கடந்த மே, 6ல் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய, 25 வயது மதிக்கத்தக்க மக்னா யானை, சந்தனப்பள்ளி கிராமத்தை ஒட்டிய பொன்னியம்மன் ஏரிக்குள், தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி உயிரிழந்தது.
கடந்த, 30ல், தேன்கனிக்கோட்டை அடுத்த பாலதொட்டனப்பள்ளி அருகே, தனியார் பட்டா நிலத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசி, 40 வயது ஆண் யானை உயிரிழந்தது.
வனப்பகுதியை ஒட்டிய கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில், மின்கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால், அவ்வழியாக வரும் யானை போன்ற உயரமான விலங்குகள் உயிரிழக்கின்றன. இதை மின்வாரியம் கண்டுகொள்ளாமல் இருப்பது தான், யானைகள் உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது.
வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், ஆய்வு செய்து, தாழ்வாக செல்லும் மின்கம்பங்களின் கம்பிகளை உயரமாக அமைக்க, மின்வாரியம் நடவடிக்கை எடுக்கா விட்டால், இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்கும். எனவே, மின்வாரியம் அலட்சியம் காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும்.
அதேபோல், விவசாய நிலங்களில் வைக்கப்படும் மின்வேலிகளை கண்டறிந்து, வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்தால், மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பதை தடுக்கலாம் என, வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.