Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஏ.டி.எம்., கொள்ளையில் டிரைவர் கைது ஹரியானா கும்பலை பிடிக்க தீவிரம்

ஏ.டி.எம்., கொள்ளையில் டிரைவர் கைது ஹரியானா கும்பலை பிடிக்க தீவிரம்

ஏ.டி.எம்., கொள்ளையில் டிரைவர் கைது ஹரியானா கும்பலை பிடிக்க தீவிரம்

ஏ.டி.எம்., கொள்ளையில் டிரைவர் கைது ஹரியானா கும்பலை பிடிக்க தீவிரம்

ADDED : ஜூலை 26, 2024 11:47 PM


Google News
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பாகலுார் சாலையில் என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில் ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையத்தில், 6ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு நுழைந்த மர்ம கும்பல், காஸ் வெல்டிங்கால் இயந்திரத்தை உடைத்து, 14.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பியது. இது ஹரியானா மாநில கும்பல் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய, மூன்று பேர் கும்பலை தமிழகத்திற்குள் அழைத்து வந்த, ஹரியானா மாநிலம், மேவாத் அருகே கமேடா பகுதியை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் சபீர், 35, என்பவரை ஓசூர் டவுன் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

ஹரியானாவில் இருந்து, மதுரைக்கு பார்சல் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை டிரைவர் சபீர் ஓட்டி வந்தார். அவரிடம் தலா, 2,000 ரூபாய் கொடுத்து மூன்று பேர் தமிழகத்திற்கு வருவதாக கூறி ஏறிக் கொண்டனர்.

மதுரை வந்த அக்கும்பல், அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தது. ஓசூர் அருகே காமன்தொட்டியில், 'மாருதி இகோ' காரை திருடிய கொள்ளை கும்பல், கர்நாடகா மாநிலத்திற்கு சென்று அங்கு ஏ.டி.எம்.,மில் கொள்ளையடித்து, அங்கிருந்து ஓசூர் வந்து ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,மில், 14.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது.

காமன்தொட்டியில் திருடிய காரை, கர்நாடகாவின் மாலுார் பகுதியில் நிறுத்தி விட்டு கொள்ளை கும்பல் தப்பியது. அந்த காரை பறிமுதல் செய்துள்ளோம். சம்பவத்தில், கன்டெய்னர் லாரி டிரைவரும், கொள்ளை கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளார். பாகலுார் சாலையில் லாரியை நிறுத்தி விட்டு, திருட்டு காரை அவர் தான் ஓட்டி சென்றுள்ளார். கொள்ளையர் மூவர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us