Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பெங்களூரில் பரவும் 'டெங்கு' தமிழக எல்லையில் சுகாதார பணிகள் மந்தம்

பெங்களூரில் பரவும் 'டெங்கு' தமிழக எல்லையில் சுகாதார பணிகள் மந்தம்

பெங்களூரில் பரவும் 'டெங்கு' தமிழக எல்லையில் சுகாதார பணிகள் மந்தம்

பெங்களூரில் பரவும் 'டெங்கு' தமிழக எல்லையில் சுகாதார பணிகள் மந்தம்

ADDED : ஜூலை 04, 2024 02:05 AM


Google News
ஓசூர்:தமிழக எல்லையான, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.

கர்நாடகாவில், தற்போது, 'டெங்கு' காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு, 'டெங்கு' காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில், எல்லையிலுள்ள ஓசூர் பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

ஓசூர் மாநகராட்சியை பொருத்தவரை, சுத்தம் செய்யப்படாத சாக்கடை கால்வாய்கள் அதிகளவில் உள்ளன. அதனால், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

மாநகராட்சியில், 90,000 குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. 3.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

மக்கள் அடர்த்தி அதிகமான இங்கு டெங்கு காய்ச்சல் பரவினால், அடுத்தடுத்து அதன் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் மூலம், நோய் பாதிப்புள்ள பகுதியில் மட்டும் கொசு மருந்து அடித்தாலும், போதிய உபகரணங்கள் இல்லை.

இயந்திரங்களை மாற்றி, மாற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று தான், மருந்து அடிக்க வேண்டியுள்ளது. இதனால், கால விரயமாகிறது. பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்க முடியாத நிலை உள்ளது.

கர்நாடகாவிற்கு மக்கள் சர்வ சாதாரணமாக சென்று வரும் நிலையில், தமிழகத்திற்குள், டெங்கு பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல், சாக்கடை கால்வாய்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து சுத்தம் செய்வதை தீவிரப்படுத்த வேண்டும்.

எல்லையிலுள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us