/உள்ளூர் செய்திகள்/கரூர்/வறட்சியால் கோரை உற்பத்தி சரிவு; விலை ஏற்றமின்றி விவசாயிகள் ஏமாற்றம்வறட்சியால் கோரை உற்பத்தி சரிவு; விலை ஏற்றமின்றி விவசாயிகள் ஏமாற்றம்
வறட்சியால் கோரை உற்பத்தி சரிவு; விலை ஏற்றமின்றி விவசாயிகள் ஏமாற்றம்
வறட்சியால் கோரை உற்பத்தி சரிவு; விலை ஏற்றமின்றி விவசாயிகள் ஏமாற்றம்
வறட்சியால் கோரை உற்பத்தி சரிவு; விலை ஏற்றமின்றி விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 10, 2024 06:57 AM
கரூர்: வறட்சி காரணமாக கோரை உற்பத்தி சரிந்து வரும் நிலையில், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் வாங்கல், என்.புதுார், பிச்சம்பாளையம், கடம்பங்குறிச்சி, தளவாய்பாளையம், தோட்டக்குறிச்சி, நெரூர் உட்பட பகுதிகளில் கோரை பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் போதும், குறைந்தபட்சம், 30 ஆண்டுகள் வரை, ஆறு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவில்லாத கோரை புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோரை புல் மூலம், அதிகளவில் பாய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கான்கிரீட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது. ஆனால், கோரை உற்பத்தி குறைந்த போதும் விலை அதிகரிக்கவில்லை என, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து, கரூர் நெரூரை சேர்ந்த கோரை புல் விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோரை புல், 16 இன்ச் கொண்ட ஆறு கட்டுகள், 1,200 முதல், 1,300 ரூபாய் வரை விலை போனது. தற்போது, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கவில்லை என்பதால், வாய்க்காலில் நீர் வரத்து கிடையாது. வறட்சி காரணமாக, 60 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி குறைந்துள்ளது. இருந்தாலும்., விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்ய வேண்டி உள்ளது. இடைத்தரகர்கள் மூலம் தான், கோரை புல்லை விவசாயிகள் விற்க முடிகிறது. நேரடியாக விற்பனை செய்ய வழியில்லை. அறுவடை காலங்களில், நெல்லுக்கு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது போல, கோரை புல்லுக்கும் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும். அப்போதுதான், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.