Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் புறவழி சாலை திட்டத்தில் ரயில்வே மேம்பால பணி துவக்கம்

வாலாஜாபாத் புறவழி சாலை திட்டத்தில் ரயில்வே மேம்பால பணி துவக்கம்

வாலாஜாபாத் புறவழி சாலை திட்டத்தில் ரயில்வே மேம்பால பணி துவக்கம்

வாலாஜாபாத் புறவழி சாலை திட்டத்தில் ரயில்வே மேம்பால பணி துவக்கம்

ADDED : செப் 21, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத்:வாலாஜாபாத் புறவழிச் சாலை அமைக்கும் பணியில், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ரயில்வே மேம்பால பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த ஓரிரு மாதங்களில் வாலாஜாபாத் புறவழிச் சாலை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் உள்ளது. வாலாஜாபாத் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாலாஜாபாத் முக்கிய நகர் பகுதியாக இருந்து வருகிறது.

செங்கல்பட்டு வழியாக காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள் மற்றும் வாலாஜாபாத் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தாம்பரம், ஒரகடம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் வாலாஜாபாத் ராஜவீதி வழியாக இயங்குகின்றன.

மேலும், மதுார், சிறுதாமூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் வாலாஜாபாத் ராஜவீதி வழியாக சென்று வருகின்றன.

ஒரகடம், தேவரியம்பாக்கம், கட்டவாக்கம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதி தனியார் தொழிற்சாலைகளில் இருந்து, தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் கம்பெனி பேருந்துகளும் வாலாஜாபாத் சாலை வழியாக செல்கின்றன.

இதனால், வாலாஜாபாத் சாலையில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து, காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல தரப்பு மக்களும் தினசரி அவதிப்படுகின்றனர்.

இதை தவிர்க்க, வாலாஜாபாத் சாலையில், புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதனிடையே, சென்னை- - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

இதில், வாலாஜாபாத் புறவழிச் சாலை அமைக்க 141. 59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, காஞ்சி - செங்கை சாலையில், வெண்குடி அருகே துவங்கி கிதிரிப்பேட்டை வழியாக புளியம்பாக்கம் சாலையை சென்றடையும் வகையில், 6.5 கி.மீ., புறவழிச் சாலை அமைக்கும் பணி 2022ல் துவங்கியது.

புறவழிச் சாலை பணியை, 2024 மார்ச்- 31க்குள் நிறைவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டது.

ஆனால், அதற்கான ஒப்பந்த காலம் முடிவுற்று ஒன்றரை ஆண்டாகியும் புறவழிச் சாலை பணி நிறைவு பெறாமல் உள்ளது.

வாலாஜாபாத் புறவழிச் சாலை அமையும் தடத்தில், புளியம்பாக்கம் அருகே மின்சார ரயில் வழிதடத்தின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டிய பணி கிடப்பில் இருந்ததால் இத்திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது ரயில்வே துறையின் ஒப்புதல் கிடைக்கப் பெற்று அப்பகுதியில் ரயில்வே மேம்பால பணி துவங்கப்பட்டுள்ளது.

இதனால், திட்டம் நிறைவேற்றப்பட்டு வாலாஜாபாத் புறவழிச் சாலை விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை -- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது,

வாலாஜாபாத் புறவழிச் சாலை அமைகின்ற வழியான புளிம்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி இருந்தது. இதற்காக ரயில்வே துறையிடம் அனுமதி பெறுதல் உள்ளிட்ட விதிகள் இருந்தன.

ஆவணங்களை பரிசீலித்து வந்த ரயில்வே அதிகாரிகள் சமீபத்தில்தான் ரயில்வே மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளித்தனர். அதை தொடர்ந்து விடுபட்ட பணி தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

அடுத்த ஓரிரு மாதங்களில் இப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us