Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தற்காலிக ராஜாஜி மார்க்கெட் இடிக்கப்பட்டு கட்டட கழிவு அகற்றும் பணி துவக்கம்

தற்காலிக ராஜாஜி மார்க்கெட் இடிக்கப்பட்டு கட்டட கழிவு அகற்றும் பணி துவக்கம்

தற்காலிக ராஜாஜி மார்க்கெட் இடிக்கப்பட்டு கட்டட கழிவு அகற்றும் பணி துவக்கம்

தற்காலிக ராஜாஜி மார்க்கெட் இடிக்கப்பட்டு கட்டட கழிவு அகற்றும் பணி துவக்கம்

ADDED : மார் 11, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
ஓரிக்கை:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கி வந்த ராஜாஜி மார்க்கெட் 1933ல் கட்டப்பட்டதாக நுழைவாயில் வளைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழமையான கட்டடம் என்பதால், மழைக்கு ஒழுகி, சகதியாக மாறியதால், வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும், நெருக்கடியான இடத்தில் ராஜாஜி மார்க்கெட் இயங்கி வந்ததால், பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ராஜாஜி மார்க்கெட், ஓரிக்கையில் தற்காலிமாக இயங்க இடமாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 2022ம் ஆண்டு புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணி துவங்கியது.

இதில், கான்கிரீட் தளம் கொண்ட கடைகள், தரை கடைகள், கிடங்கு என, 258 கடைகள் கட்டுமானப் பணி முடிந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ராஜாஜி மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிச.,5ம் தேதி நடந்த டெண்டரில், கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் உரிமையை 1.71 கோடி ரூபாய்க்கு ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் டெண்டர் எடுத்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம், 12ம் தேதி, ராஜாஜி மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பூஜை போடப்பட்டது.

தொடர்ந்து மார்க்கெட் கட்டடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து வர்ணம் தீட்டுதல், உட்புறத்தில் தடுப்பு கம்பி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிந்த நிலையில், இதையடுத்து ஓரிக்கையில் தற்காலிகமாக இயங்கி வந்த கடைகள் அனைத்தும், ராஜாஜி மார்க்கெட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, கடந்தத மாதம் 14ம் தேதி, ராஜாஜி மார்க்கெட் விற்பனை துவக்க விழா மற்றும் திறப்பு விழா நடந்தது.

இதையடுத்து, ஓரிக்கையில் தற்காலிகமாக இயங்கிய ராஜாஜி மார்க்கெட்டின் இரும்பு தகடு கூரைகள் அகற்றப்பட்டு சுவர்கள் இடிக்கப்பட்டு , கட்டட கழிவு அனைத்தும் லாரி வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மார்க்கெட் இயங்கிய இடம் சமன்படுத்தும் பணி துவக்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us