Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குவாரிகளில் வெடி வைக்கும்போது சிதறும் கற்களால் விவசாயிகள் பாதிப்பு

குவாரிகளில் வெடி வைக்கும்போது சிதறும் கற்களால் விவசாயிகள் பாதிப்பு

குவாரிகளில் வெடி வைக்கும்போது சிதறும் கற்களால் விவசாயிகள் பாதிப்பு

குவாரிகளில் வெடி வைக்கும்போது சிதறும் கற்களால் விவசாயிகள் பாதிப்பு

ADDED : மார் 11, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சியில், பட்டா, அருங்குன்றம், சிறுதாமூர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு, அதன் வாயிலாகவும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம் ஆகிய கிராமங்களில், தனியார் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வெடிவைத்து எடுக்கப்படும் பாறைகளை, அருகிலுள்ள கிரஷர்களில் உடைத்து எம் - சாண்ட், ஜல்லிகள் ஆகியவையாக மாற்றப்படுகின்றன.

பின், லாரிகள் வாயிலாக, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, பட்டா கிராமத்தில் இயங்கிவரும் தனியார் கல் குவாரி ஒன்று, பூமியில் வெடி வைத்து பாறைகளை உடைத்து எடுத்து வருகிறது. பாறைகளை வெடிவைத்து உடைக்கும் போது, அங்கிருந்து சிதறும் கற்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களில் விழுகிறது.

அப்போது, அருகிலுள்ள நிலங்களில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டுள்ள கால்நடைகள் மீது கற்கள் விழுந்து பலத்த காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் விவசாய நிலங்களில் வேலை செய்யும், விவசாயிகள் மீதும் கற்கள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும்போது, அருகிலுள்ள நிலங்களில் கற்கள் சிதறாதபடிக்கு, பாதுகாப்பை ஏற்படுத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

பட்டா கிராமத்தில் கல் குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும்போது, கற்கள் விவசாய நிலங்களில் சிதறுகிறது. அப்போது கற்கள் கால்நடைகள் மற்றும் விவசாயிகள் மீது விழுவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் குறைத்தீர் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், பட்டா கிராமத்தில் சில கல் குவாரிகள் சமூக காடுகள் வழியே பாதை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us