/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் புத்துயிர்பெறுமா? கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கை தேவைகிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் புத்துயிர்பெறுமா? கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கை தேவை
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் புத்துயிர்பெறுமா? கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கை தேவை
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் புத்துயிர்பெறுமா? கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கை தேவை
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் புத்துயிர்பெறுமா? கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 23, 2024 10:55 PM

கள்ளக்குறிச்சி : பொதுமக்களுக்கும் - போலீசாருக்கும் நல்லுணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட, கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்த எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை, திருட்டு, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடக்கிறது. முந்தைய காலங்களில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே குற்ற சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால், குற்றம் நடந்த பாணியை வைத்தே சம்மந்தப்பட்ட நபரை போலீசார் எளிதாக கண்டறிந்தனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மது, கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் திடீரென குற்ற சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
அன்றாட செலவுக்காகவும், போதைக்காகவும் சிறிய அளவிலான திருட்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
போதைப்பொருட்கள் தற்போது உருமாறி சாக்லேட் வடிவிலும் கிடைக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் போதை சாக்லேட்டுகளை கொண்டு வந்து இங்குள்ளவர்களுக்கு தருகின்றனர். இதுபோன்ற நபர்களை கண்டறிவது போலீசாருக்கு சவாலாக உள்ளது.
இந்நிலையில், கிராமங்களில் ஏற்படும் சம்பவங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், பொதுமக்களுக்கும் - போலீசாருக்கும் நல்லுணர்வு ஏற்படும் வகையிலும் கடந்த 2021ம் ஆண்டு, 'வில்லேஜ் விஜிலென்ஸ் போலீஸ்' என்ற கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி 2 - 3 கிராமங்களுக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டனர். இந்த காவலரின் புகைப்படம், பெயர், தொடர்பு எண்ணுடன் கூடிய அறிவிப்பு பலகை கிராமங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டது.
மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவலரை வைத்து வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டது.
ஊரில் நடைபெறும் திருவிழா, விளையாட்டு போட்டி, பிரச்னை, அசம்பாவிதம் குறித்த தகவலை வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிடலாம் அல்லது தனிப்பட்ட முறையில் போலீசாருக்கு அனுப்பலாம் என கூறப்பட்டது.
இதனால், கிராமங்களில் நடக்கும் சம்பவங்களை போலீசார் எளிதில் தெரிந்து கொண்டனர். இத்திட்டம் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், காலப்போக்கில் இத்திட்டம் முறையாக செயல்படவில்லை. அதாவது, போலீசார்கள் பணிமாறுதல் பெற்று வெவ்வேறு ஸ்டேஷனுக்கு சென்ற பிறகு, வேறு காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர எஸ்.பி., ரஜத்சதுர்வேதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.