Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உலகளந்த பெருமாள் கோவில் சன்னதி வீதியில் ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா?; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

உலகளந்த பெருமாள் கோவில் சன்னதி வீதியில் ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா?; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

உலகளந்த பெருமாள் கோவில் சன்னதி வீதியில் ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா?; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

உலகளந்த பெருமாள் கோவில் சன்னதி வீதியில் ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா?; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

ADDED : செப் 16, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலின், சன்னதி வீதி மற்றும் கோவிலுக்கு சொந்தமானஇடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுநாட்டு திருப்பதி, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், பக்தர்களுக்கான வசதி, பாதுகாப்பு, புராதான கோவிலின் பெருமையை காட்சிப்படுத்தும் வகையிலான கட்டமைப்புகள் இல்லை.

கிழக்கு பெரிய கோபுரம், சன்னதி வீதியின் நுழைவு வாயிலாக உள்ளது. இதனைக் கடந்து சன்னதி வீதிக்குள் நுழைந்தாள், சாலையின் இரு பக்கமும் 15 அடிக்கும் அதிகமான துாரத்தில் நிரந்தர கான்கிரீட் ஆக்கிரமிப்புகள் சாலையை கபளிகரம் செய்துள்ளது.

அதையும் தாண்டி சாலையின் இரு பக்கமும் தள்ளுவண்டி உள்ளிட்ட வியாபாரம் நடக்கிறது. மறுபுறம் வெளியூர் பக்தர்களின் கார்கள் வரிசையாக நிறுத்தப்படுகிறது. இதனால் நடந்து செல்லும் பக்தர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

சன்னதி வீதியின் இரண்டு பக்கமும் நான்கு கால்கள், மேலே விமானங்களுடன் கூடிய 8 உரியடி மண்டபங்கள் வீதிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது . இவை அனைத்தும் மறையும் அளவிற்கு ஆக்கிரமிப்புகள் நீண்டு உள்ளது.

கோவிலின் நுழைவு பகுதியில் 16 கால் மண்டபம் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கம்பீரமாக நிற்கும் 15 நுாற்றாண்டுகள் பழமையான ராஜகோபுரத்தின் இரண்டு பக்கமும் உயர்ந்து நிற்கும் மதில் சுவர்கள் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவிலின் சுற்று சுவராக அமைந்திருக்கிறது. சுற்று சுவரை சுற்றி கடைகளும், தனி நபர்களின் வீடுகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளால் கோவிலின் அழகை ரசிக்க முடியாதது மட்டும் இன்றி பக்தர்களுக்கு ஏராளமான இடையூறுகள் ஏற்படுகிறது.

தற்பொழுது கோவிலின் முன்பக்க ராஜகோபுரம் மற்றும் மேற்கு ராஜகோபுரங்களுக்கான திருப்பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பொழுதே கோயிலின் முகப்பு பகுதி, மதில் சுவரை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் வாகன நிறுத்தத்தை ஒழுங்குப்படுத்தலாம். சன்னதி வீதியில் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை ஏற்படுத்துவதன் மூலம் பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு சென்று வர முடியும்.

அதேபோல் 5 முனை சந்திப்பில் தேர் வடம் போக்கி என்ற பெயரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எளிதாக செல்வதிற்கு வசதியாக கோவில் பெயரில் இடம் உள்ளது. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து கடைகள் கட்டி வைத்துள்ளனர். இதனால் 5 முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவில் நிர்வாகம் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புளை அகற்றி வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தலாம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், கோவில் நிர்வாகமும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சன்னதி வீதியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை கோவிலின் மேம்பாட்டுக்காக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us