/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்குவதில்... சிக்கல்; ஷட்டர்களை புதுப்பிக்க நடவடிக்கை தேவை மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்குவதில்... சிக்கல்; ஷட்டர்களை புதுப்பிக்க நடவடிக்கை தேவை
மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்குவதில்... சிக்கல்; ஷட்டர்களை புதுப்பிக்க நடவடிக்கை தேவை
மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்குவதில்... சிக்கல்; ஷட்டர்களை புதுப்பிக்க நடவடிக்கை தேவை
மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்குவதில்... சிக்கல்; ஷட்டர்களை புதுப்பிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 14, 2025 01:14 AM

கள்ளக்குறிச்சி: மணிமுக்தா அணையில் உள்ள, பழைய ஷட்டர்களின் தாங்கும் திறன் குறைந்துள்ளதால், தண்ணீரை தேக்கி வைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம், 736.96 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் பொழியும் மழை நீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது.
இதுதவிர, மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, விவசாயத்திற்காக பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசனத்தை சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் நேரடியாக பயன்பெறும். மேலும், அதிகளவு மழை பெய்யும் பட்சத்தில் ஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.
இதனால் ஆற்றில் உள்ள அணைக்கட்டுகள் நிரம்புவதுடன், அருகாமையில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லும். விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக மணிமுக்தா அணை உள்ளது.
கடந்த 1970ம் ஆண்டு மணிமுக்தா அணை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அணையில் இருந்த, 3 ஷட்டர்கள், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து, அதன் வழியே தண்ணீர் கசிந்து வெளியேறி ஆற்றில் கலந்து வீணாகியது. இதையொட்டி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் புதிதாக 4 ஷட்டர்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது, அதிகளவு மழை பெய்யும் பட்சத்தில் புதிய ஷட்டர்கள் வழியாக தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பழைய ஷட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளது. ஆனால், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பழைய ஷட்டர்கள் வலுவிழந்து இருப்பதால் தண்ணீர் தாங்கும் திறன் முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால், தற்போது அணையில் 30 அடி கொள்ளளவுக்கு மேல் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. 30 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கினால் பழைய ஷட்டர்களில் பலத்த சத்தமும், அதிகளவு தண்ணீர் கசிவும் ஏற்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் உடையும் அளவிற்கு பழைய ஷட்டர்கள் மாறிப்போய் உள்ளன.
நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு மழை பெய்ததால் மணிமுக்தா அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டது. ஆனால், இயற்கை தந்த வாய்ப்பை பயன்படுத்தி அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை.
அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டதால், கடந்த மே 21ம் தேதி விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து, வெளியேற்றப்படும் தண்ணீரில் அளவு படிப்படியாக குறைத்து, நேற்று நிலவரப்படி விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து, 24 நாட்களாக அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால் அணையில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன் பழைய ஷட்டர்களை புதுப்பித்திட மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.