/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுங்கள் அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுங்கள்
அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுங்கள்
அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுங்கள்
அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுங்கள்
ADDED : ஜூலை 20, 2024 05:59 AM

சின்னசேலம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று கலெக்டர் பிரசாந்த் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். அதில் பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணிகள், குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை ஆய்வு செய்து, இயற்கை உரத்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் பராமரிப்பு பணிகள் குறித்தும், குடிநீர் வடிகால் வாரிய களநீர் தர பரிசோதனை மூலம் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின், அ.வாசுதேவனுார் ஊராட்சி துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையின் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கினார். அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின், மூகாம்பிகை நகரில் 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறுவர் பூங்கா, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்ட கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட அரசு துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அதில் பொதுமக்களின் கோரிக்கையான சாலை, குடிநீர், உயர்மின் கோபுர மின் விளக்கு, பள்ளிகள் பராமரிப்பு, கழிவறை வசதி, கிராம சுகாதார மையம், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம், சுற்றுச்சூழல் வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவி வழங்க வேண்டும். வருவாய் துறை சார்பில் பொதுமக்கள் விண்ணப்பித்த சான்றுகளை தாமதமின்றி வழங்க வேண்டும்.
வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை கண்டறிந்து, அத்திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் கண்ணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், பி.டி.ஓ.,க்கள் செந்தில்முருகன், ரவிசங்கர், தாசில்தார் மனோஜ் முனியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.