/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காவல் துறை செயல்படவில்லை; அமைச்சர் வேலு ஒப்புதல் காவல் துறை செயல்படவில்லை; அமைச்சர் வேலு ஒப்புதல்
காவல் துறை செயல்படவில்லை; அமைச்சர் வேலு ஒப்புதல்
காவல் துறை செயல்படவில்லை; அமைச்சர் வேலு ஒப்புதல்
காவல் துறை செயல்படவில்லை; அமைச்சர் வேலு ஒப்புதல்
ADDED : ஜூன் 20, 2024 08:13 PM
உளுந்துார்பேட்டை : காவல் துறை முறையாக செயல்பட்டு இருந்தால் இச்சம்பவம் நடந்து இருக்காது என, அமைச்சர் வேலு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
அப்போது அமைச்சர்கள் வேலு, சுப்ரமணியன், மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உடன் இருந்தனர்.
அமைச்சர் வேலு கூறியதாவது; அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காப்பாற்றுவதற்காக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. முதல்வர் சார்பாக அமைச்சர் உதயநிதி நேரில் வந்து சிகிச்சை அளிக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.
காவல் துறை முறையாக செயல்பட்டு இருந்தால் இச்சம்பவம் நடந்து இருக்காது. இதனால் தான் எஸ்.பி., டி.எஸ்.பி., உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்தாஸ் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில் அமைச்சர் உதயநிதி 27 குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.
பாதிக்கப்பட்ட மற்ற குடும்பத்தினருக்கும் நிதி வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 132 பேரில், 38 பேர் இறந்துள்ளனர். சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது சி.பி.சி.ஐ.டி., வழக்காக மாற்றப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை இருக்கும். எதிர்க் கட்சி தலைவர் மருத்துவமனையில் மருந்தே இல்லை என்கிறார். ஆனால் மருத்துவமனையில் மருந்துகளும் அவருடைய சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு அவர், கூறினார்.