ADDED : ஜூன் 19, 2024 11:07 PM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள லக்கி நாயக்கன்பட்டியில் தம்பதியை கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிராசா மகன் அப்துல் காதர், 49; அதே ஊரில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவரிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அதே ஊரை சேர்ந்த வேல்முருகன், 39, என்பவர், இப்பகுதியில் நீங்கள் கடை நடத்தக் கூடாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே காதர் பாஷாவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வேல்முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால், காதர் பாஷா தலையில் வெட்டினார். தடுக்க வந்த காதர் பாஷாவின் மனைவி தாஷிராபீ 45, என்பவரையும் வெட்டினார். காயமடைந்த இருவரும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து நேற்று வேல்முருகனை கைது செய்தனர்.