Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மீண்டும் கள்ளச்சாராய பலி

மீண்டும் கள்ளச்சாராய பலி

மீண்டும் கள்ளச்சாராய பலி

மீண்டும் கள்ளச்சாராய பலி

ADDED : ஜூன் 20, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த இரண்டு பெண்கள் உட்பட 17 பேர் இறந்தனர்; 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்; பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சாராய பலி இல்லை என பகிரங்கமாக பொய் சொன்ன கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

எஸ்.பி., மற்றும் எட்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 46; மூட்டை துாக்கும் தொழிலாளி. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திடீரென இவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் இவரை சேர்த்தனர்; சிகிச்சை பலனின்றி இறந்தார்.

70 பேர்


அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன், 29; கூலித் தொழிலாளிகள் சேகர், 65; சுரேஷ், 40, ஆகியோரும் அடுத்தடுத்து வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மூவரும் இறந்தனர்.

தொடர்ந்து, ஆறுமுகம், 75; தனக்கோடி, 55, ஆகியோரும் இதே போல அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இறந்த ஆறு பேரும் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தனர்; அதன் பிறகே பாதிப்பு ஏற்பட்டது என பகுதிவாசிகள் கூறினர்.

இதற்கிடையே, கருணாபுரத்தில் சாராயத்தை வாங்கி குடித்த 70க்கும் மேற்பட்டோர் இதே பாதிப்புகளுடன் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளிலும்; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

ஜிப்மரில் சேர்க்கப்பட்ட 19 பேரில், கருணாபுரம் கிருஷ்ணமூர்த்தி, 62; மணி, 58; குப்பன் மனைவி இந்திரா, 48, ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்

படுகிறது.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணிகண்டன், 35, என்பவர் உயிரிழந்தார். மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் நாராயணசாமி, 65; ராமு, 50; சுப்ரமணி, 56, ஆகியோர் இறந்தனர்; தீவிர சிகிச்சையில்

இருந்த ஐந்து பேர் நள்ளிரவில் இறந்தனர்.

மரணச் செய்திகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருந்த நிலையில், கலெக்டர் ஷ்ரவண்குமார் அவசரமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 'சாராயம் காய்ச்சவோ, விற்கவோ இல்லை; யாரும் சாராயம் குடித்து பலியாகவில்லை; நன்கு விசாரித்தே இதை சொல்கிறேன்' என கலெக்டர் சொன்னார். பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்ததால், எஸ்.பி., உட்பட 10 போலீஸ் அதிகாரிகளை, அரசு தற்காலிக பணி நீக்கம் செய்தது; கலெக்டர் ஷ்ரவண்குமார் ஜடாவத்தை இடமாற்றம் செய்தது; வழக்கு, சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அரசு வெளியிட்ட அறிக்கை:

கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 பேர் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்து, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

சடலக் கூராய்வு


காவல் துறை மற்றும் வருவாய் துறை விசாரணையில், அவர்கள் பாக்கெட் சாராயத்தை குடித்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. சடலக் கூராய்வுக்கு பின், இறப்பின் காரணம்

தெரிய வரும். விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து சிறப்பு மருத்துவர் குழு அனுப்பப்பட்டுள்ளது. 18 பேர் உயர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதார திட்ட இயக்குனர் கோவிந்த ராவ், மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். அமைச்சர்கள் வேலு, சுப்பிரமணியன் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.

பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, 49, கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து, 200 லிட்டர் விஷச்

சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவண்குமார் ஜடாவத், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., சமய்சிங் மீனா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.,யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி., தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் கவிதா, திருக்கோவிலுார் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, எஸ்.ஐ., பாரதி, அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், எஸ்.ஐ., ஷிவ்சந்திரன், போலீஸ் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு எஸ்.ஐ., மனோஜ், திருக்கோவிலுார் போலீஸ் டி.எஸ்.பி., ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.வழக்கை தீர விசாரிக்கவும், தக்க மேல் நடவடிக்கைக்காகவும், உடனடியாக சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலிவாக கிடைக்கும் மெத்தனால்!


''தொழிற்சாலை பயன்பாட்டுக்கான மெத்தனால் மிக எளிதாக அனைவருக்கும் கிடைக்கிறது. மலிவு விலையில் கிடைக்கும் மெத்தனாலை, சாராயத்தைப் போன்று காய்ச்ச வேண்டி இருக்காது. 1 லிட்டர் மெத்தனாலில், 100 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி, கள்ளச்சாராயமாக சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.

மெத்தனாலை எந்த விதத்திலும் உட்கொள்வது, உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது இல்லை. அவ்வாறு குடிப்பதன் வாயிலாக, அனைத்து உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக கல்லீரல், சிறுநீரகம், கண் பார்வை பாதிக்கப்படுகின்றன.

அனைத்து தரப்பினருக்கும் மெத்தனால் கிடைப்பதை தடுக்க வேண்டும். மெத்தனால் விற்பனை செய்யும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, எந்த பயன்பாட்டுக்கு வாங்கப்படுகிறது என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அப்போது தான், மெத்தனால் குடித்து உயிரிழப்பதை தடுக்க முடியும்.

- குழந்தைசாமி,பொது சுகாதாரத்துறை நிபுணர்

வயிற்றுப்போக்கு கண், காது போச்சு


இறந்த டி.சுரேஷ் மனைவி ரஷீதா பானு:என் கணவர் சுரேஷ், மூட்டை துாக்கும் தொழிலாளி. எங்களுக்கு, 16 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் மாலை, என் கணவர் சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். நள்ளிரவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, கண் பார்வை குறைவதாகவும், காது சரியாக கேட்கவில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து உடல் நிலை கவலைக்கிடமானதால், நேற்று காலை 7:30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவர் இறந்தார்.

ரத்த வாந்தி


பிரவீன் என்பவர் தாய் ரெஜினா:

என் மகன் பிரவீன் பெயின்டராக வேலை செய்தார். அவருக்கு, 5 மற்றும் 4 வயதில் குழந்தைகள் உள்ளனர். பிரவீன் நேற்று முன்தினம் மாலை சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், நள்ளிரவு 12:00 மணிக்கு ரத்தி வாந்தி எடுத்தார். அச்சமடைந்து அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், அங்கிருந்தவர்கள், 'மது அருந்தி இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது' என்றனர். அதனால், அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தோம். பின், நேற்று காலை 6:00 மணிக்கு, மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவர் காலை 8:00 மணிக்கு இறந்தார்.

தகவல் சொல்லுங்கள்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் இறந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து, பொது மக்கள் தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். ஸ்டாலின், முதல்வர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us