/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் குற்ற வழக்கு பதிய பரிந்துரைகீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் குற்ற வழக்கு பதிய பரிந்துரை
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் குற்ற வழக்கு பதிய பரிந்துரை
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் குற்ற வழக்கு பதிய பரிந்துரை
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் குற்ற வழக்கு பதிய பரிந்துரை
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
ஈரோடு : 'கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய், பகிர்மான கால்வாயில் முறைகேடாக வணிக நோக்கில் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதை கண்டறிந்து, குற்ற வழக்கு பதியவும், அவற்றை அகற்றவும், கான்கிரீட் மூலம் அடைக்கவும், மின் இணைப்பை துண்டிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என, நீர் வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம், ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாயும் தண்ணீரால், ஆண்டுக்கு, 2.07 லட்சம் ஏக்கர் நேரடியாகவும், கசிவு நீர் மூலம், 1 லட்சம் ஏக்கருக்கு மேல் மறைமுயமாக பாசனம் பெறுகிறது. இதில், 2.07 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள். ஆயக்கட்டு நிலங்களுக்கு பாயும் தண்ணீரை, அனுமதி பெறாமல் குழாய் மூலமும், வாய்கால் அருகே போர்வெல், கிணறு அமைத்தும், நேரடியாக மோட்டார் வைத்தும் உறிஞ்சி ஆயக்கட்டு இல்லாத பாசனத்துக்கும், தண்ணீர் விற்பனைக்கும், குளிர்பான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பயன்படுத்துகின்றன.இதை தடுக்க கோரி, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்க பொருளாளர் சண்முகராஜ் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவையும், சில வழிகாட்டுதலையும் வழங்கியது. இதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, நீர் வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மனுதாரருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:நீதிமன்ற வழிகாட்டுதல் படி, அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ.,வை தலைவராக கொண்டு டி.எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் உட்பட, 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய், பகிர்மான கால்வாயில் முறைகேடாக வணிக நோக்கில் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதை கண்டறிந்து, குற்ற வழக்கு பதியவும், அவற்றை அகற்றவும், கான்கிரீட் மூலம் அடைக்கவும், மின் இணைப்பை துண்டிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.நடவடிக்கை குறித்து ஈரோடு கலெக்டர் தன் பதில் கடிதத்தில், இக்குழு மூலம், 41 இடங்களில், 159 திறந்த வெளி கிணறு, போர்வெல், பைப்லைன் கண்டறியப்பட்டு, உரியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அமைப்பு, இணைப்புகளை தாங்களாக அகற்றி கொள்ளாவிட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். சத்தி அக்கரைதத்தப்பள்ளியில், 2 பைப்லைன், கொடுமுடி அருகே வள்ளிபுரத்தில், 1 இணைப்பு, மொடக்குறிச்சி அருகே கஸ்பாபேட்டையில், 2 இணைப்புகளின் மின் இணைப்பு அகற்றி, குழாய்கள் அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், கீழ்பவானி கால்வாயில் இடது, வலது புறம் இருந்து முறையற்ற, அனுமதியற்ற தண்ணீர் எடுக்கும் பம்புசெட்கள் கண்டறியப்பட்டால், முற்றிலும் அகற்றப்படும். கால்வாயில் இருந்து, 50 மீட்டருக்குள் அங்கீகாரமற்ற திறந்த வெளி கிணறு, ஆழ்துளை கிணறு, பகிர்மான கால்வாயில் இருந்து, 25 மீட்டருக்குள் இதுபோன்ற அமைப்பு இருந்தால், அவற்றின் மின் இணைப்பு துண்டிக்க வேண்டும். ஆயக்கட்டு பகுதியில் சிறிதளவு நிலத்தை கிரையம் செய்து, திறந்த வெளி கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து நுாதன முறையில், ஆயக்கட்டு அல்லாத பகுதிக்கு, வணிக பயன்பாட்டுக்கு, தொழில் நிறுவனங்களுக்கு, குளிர்பான நிறுவனங்களுக்கு நீர் எடுப்பதை உறுதி செய்தால், அதை தடை செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள், செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்வாயின் பக்க வாட்டு கரையில் குறுக்கே துளையிட்டு (சைடு போர்) நீரை எடுத்தாலும், தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.