/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகர், மாவட்டத்தில் காற்றுடன் பலத்த மழை: கடம்பூரில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்குமாநகர், மாவட்டத்தில் காற்றுடன் பலத்த மழை: கடம்பூரில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு
மாநகர், மாவட்டத்தில் காற்றுடன் பலத்த மழை: கடம்பூரில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு
மாநகர், மாவட்டத்தில் காற்றுடன் பலத்த மழை: கடம்பூரில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு
மாநகர், மாவட்டத்தில் காற்றுடன் பலத்த மழை: கடம்பூரில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
ஈரோடு: ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில், நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
ஈரோட்டில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது. 91 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானாலும், வெப்பத்தின் தாக்கம், 100 டிகிரிக்கும் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில் மலை, 4:30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. 5:௦௦ மணி அளவில் பலத்த மழை கொட்டத்தொடங்கியது. மழையுடன் சில இடங்களில் இடி--மின்னலும், பலத்த காற்றும் வீசியது. கொட்டிய கனமழையால் கடைவீதி, வீரப்பன்சத்திரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கலெக்டர் அலுவலக புதிய கட்டட வளாகத்தில், வெள்ள நீர் குளம்போல தேங்கியது. ஒன்றரை மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை அதன் பிறகு துாறலாக தொடர்ந்தது. பலத்த காற்று, இடி-மின்னலால், மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில், 2 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.
காட்டாற்றில் வெள்ளம்
கடம்பூர் மலையில் நேற்று மதியம் கனமழை கொட்டியது. இதனால் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குரும்பூர்பள்ளம், சக்கரை பள்ளத்தில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் மாக்கம்பாளையம் செல்லும் அரசு பஸ் குரும்பூர் பள்ளத்துடன் திரும்பி விட்டது. இதனால் அருகியம், கோம்பை தொட்டி, மாக்கம்பாளையம் ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளான பசுவனா புரம், கரளியம், காடகநல்லி, எக்கத்துார், மோடிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதனால் எக்கத்துார் பள்ளம், சிக்கூர் பள்ளத்தில் வெள்ள நீர் பாய்ந்தோடியது.
மூழ்கிய தரைப்பாலம்
கடம்பூரை அடுத்த அணைக்கரை வனப்பகுதியில் நேற்று மதியம் பெய்த மழையால் மரூர் பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக டூவீலர்களே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மூங்கில் மரம் அடித்து வரப்பட்டு தரைப்பாலத்தின் குறுக்கே விழுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வனத்துறையினர் மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின், மழைநீர் வடிந்து, போக்குவரத்து சீரானது.
கோபியில்...
கோபியில் நேற்று மாலை, 4:15 மணிக்கு, திடீரென சாரல் மழை பெய்தது. சத்தி சாலை, கொளப்பலுார் சாலை, ஈரோடு சாலை, அத்தாணி சாலை உள்ளிட்ட பகுதியில், 4:45 மணி வரை சாரல் மழை நீடித்தது.
பெருந்துறையில்...
பெருந்துறையில் நேற்று மாலை, 4:௦௦ மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை, 5:௦௦ மணி வரை அதே அளவில் கொட்டி தீர்த்தது. பிறகு இரவு, 7:௦௦ மணி வரை லேசான மழையாக நீடித்தது. மழையால் சாலையில் வாகனங்கள் ஓட்ட முடியாமல், வாகன ஓட்டிகள் திண்டாடினர்.
பவானியில்...
பவானி, குருப்பநாய்க்கன்பாளையம், ஆர்.என்.புதுார், காலிங்ராயன்பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, 4:௦௦ மணிக்கு தொடங்கிய கனமழை, ௫:௦௦ மணிவரை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. மழையுடன் இடி, மின்னல் பலமாகவும், காற்றும் வீசியது.
சத்தியில்...
சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், கொமராபாளையம், தாசரிபாளையம், சதுமுகை, அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மாலை, 6:௦௦ மணிக்கு சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இரவு, 7.30 மணி வரை சாரல் நீடித்தது.
டி.என்.பாளையத்தில்...
டி.என்.பாளையம், டி.ஜி.புதுார், வாணிப்புத்துார், ஏழூர் கொங்கர்பாளையம், பங்களாப்புதுார், நஞ்சை புளியம்பட்டி, புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 3:௦௦ மணிக்கு தொடங்கிய மழை, ௫:௦௦ மணி வரை கொட்டியது. டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரவிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.