Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு சென்னையில் இயக்க நடவடிக்கை: அமைச்சர்

100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு சென்னையில் இயக்க நடவடிக்கை: அமைச்சர்

100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு சென்னையில் இயக்க நடவடிக்கை: அமைச்சர்

100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு சென்னையில் இயக்க நடவடிக்கை: அமைச்சர்

ADDED : ஜூலை 17, 2024 09:22 PM


Google News
ஈரோடு:''மொத்தம், 500 மின்சார பஸ்கள் வாங்க முதல்வர் அறிவிப்பு செய்து, 100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் இயக்கப்படும்,'' என, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

ஈரோட்டில், 15 புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். தலைமை வகித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பஸ்களை மாற்றி, புதிய பஸ்கள் வாங்கி, லோக்சபா தேர்தலுக்கு முன், 1,000 பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்தலுக்குப்பின், தர்மபுரியில், 11 பஸ்களை முதல்வர் இயக்கி வைத்தார். பின், திருவள்ளூரில், 10 பஸ்களை இயக்கினார். இன்று (நேற்று) காலை, கோவையில், 20 புதிய பஸ்களும், ஈரோட்டில், 15 புதிய பஸ்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் மட்டும், 300 புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.

மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என எதிர் கட்சிகள் கூறுகின்றன. அவர்கள் விருப்பம் அதுவாக இருந்தால், அதற்கெல்லம் நாங்கள் பதில் கூற தயாராக இல்லை.

கோவை பகுதியில் தனியார் பஸ்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகவும், அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. கோவை அரசு போக்குவரத்து இணை ஆணையரை, ஒரு குழு அமைத்து விசாரிக்க சொல்லி உள்ளோம். குறிப்பாக, மேட்டுப்பாளையம் பகுதியில் அதிக விபத்து நடந்துள்ளன. பிற பகுதியிலும் இதுபோன்ற புகார்கள் இருந்தால், அங்கும் குழு அமைத்து விசாரிக்கப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, அ.தி.மு.க., ஆட்சியில், 3 ஆண்டுகள் பேசாமல் விட்டுவிட்டனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 3 சுற்று பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, ஊழியர்கள் மனம் மகிழும் வகையில், பழைய ஊதிய விகிதம் சரி செய்து, 'பே-மெட்ரிக்ஸ்' முறையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட ஊதிய பேச்சுவார்த்தைக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகின்றன.

சி.என்.ஜி., பஸ்கள், பரிச்சார்த்த முறையில் ஆங்காங்கு இயக்கப்படுகிறது. அதுபற்றி ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 500 மின்சார பஸ்கள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 100 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் நடவடிக்கை முடிந்த பின், சென்னையில் அந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்த்தப்படுவது, காலம் காலமாக நடந்து வரும் பிரச்னை. ஆனாலும், நாங்கள் ஒவ்வொரு பண்டிகையின்போது, ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து, அறிவுரை வழங்கி கடந்த தீபாவளி, பொங்கலின்போது இப்பிரச்னை இல்லை. புதிதாக பஸ் வாங்கும் ஓரிருவரால் இப்பிரச்னை எழுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us