Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம்

பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம்

பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம்

பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம்

ADDED : ஜூன் 04, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
கன்னிவாடி,: பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா பகுதியில் வசிக்கும் மக்கள், ஓடையும் புதர் மூடிய நிலையில் செய்வதறியாது தவிக்கின்றனர்.

கன்னிவாடி- - பழநி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வீடற்ற ஏழைகள் பலர் குடிசைகளில் வசித்து வந்தனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு மெட்டூர்-பலக்கனுாத்து ரோடு விரிவாக்க பணி நடந்தது. இதற்காக அங்கிருந்த குடிசைகள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் வசித்த 32 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆல்டா பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. உரிய பாதை இல்லாத சூழலில் இங்கு வசிப்போர் பல ஆண்டுகளாக போக்குவரத்து வசதிக்காக அவதிப்பட்டு வருகின்றனர். கன்னிவாடி செல்லும் வழியில் 4 வழிச்சாலை பணி முடிந்தால் தற்போதைய பாதையும் தடைபடும். பாலத்தின் அடியில் சுரங்கப்பாதையும் மண், புதர் மண்டியுள்ளது. இரவில் வனவிலங்குகள் நடமாட்டம், போதிய குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு இல்லை. முதியோர், உடல் நலம் பாதித்தோர், இப்பகுதியில் இருந்து கன்னிவாடி செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

அதிகாரிகள் அலட்சியத்தால் அடிப்படை வசதிகளற்ற சூழலில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் தவித்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

புதர் மண்டிய பாதை


பொ.குமார்,கூலித்தொழிலாளி : 19 ஆண்டுகளாக பாதை வசதிக்காக அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. குடியிருக்க அனுமதித்து பல ஆண்டுகளாகியும் பட்டா வழங்கவில்லை. சீப்பாலத்து கன்னிமார் ஓடை வழியே குண்டும் குழியுமான தடத்தில் பயணிக்கிறோம். டூவீலர்கள் மட்டுமின்றி பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாமல் கரடுமுரடான வழித்தடமாக உள்ளது. தற்போது இந்த ஓடையின் பெரும்பகுதி புதர் மண்டியுள்ளது. முதியோர், கர்ப்பிணிகள் அவசரகால சிகிச்சைக்கு செல்லவும் வழித்தடம் இல்லை.

இருளால் அவதி


கு. சந்திரலேகா,குடும்பத்தலைவி : போதிய வருவாய் ஆதாரமற்ற நிலையில் தினக்கூலி பணிக்காக இங்கிருந்து தினமும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னிவாடிக்கு செல்கின்றனர். போக்குவரத்து வசதி முக்கிய பிரச்னை. இப்பகுதியில் மின்தடை நேரங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இங்குள்ள ஒரு ஆழ்துளை கிணறு, தண்ணீர் வசதி இருந்தும் பயன்பாடின்றி மூடி வைத்துள்ளனர். கை பம்பு அமைத்தால் உதவியாக இருக்கும். போதிய சாக்கடை வாறுகால் இல்லை. தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. க்ஷமழை காலங்களில் துர்நாற்றத்துடன் சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. கூடுதல் தெருவிளக்கு தேவை. பள்ளி மாணவர்கள், மாலை நேரங்களில் இருள் சூழ்ந்த நிலையில் அச்சத்துடன் வீடு திரும்புகின்றனர்.

சிரமப்படும் மாணவர்கள்


வீரலட்சுமி ,குடும்பத்தலைவி : மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர 4 வழிச்சாலையை கடந்து செல்வதில் பாதை வசதியின்றி சிரமப்படுகின்றனர். போதிய பாதுகாப்பற்ற சூழலில் அச்சத்துடன் வசிக்கிறோம். மழைக்காலத்தில் ஓடையில் தண்ணீர் செல்லும் போது வேலைக்காக வெளியில் செல்ல பாதை வசதி இல்லை. கூடுதல் தெருவிளக்கு இல்லாமல் விஷப் பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கும் அவலநிலை தொடர்கிறது என்றார். -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us