/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிரச்னையும் தீர்வும் பகுதிக்கு ; வடமதுரையில் ஆபத்தான நால்ரோடு சந்திப்பு பிரச்னையும் தீர்வும் பகுதிக்கு ; வடமதுரையில் ஆபத்தான நால்ரோடு சந்திப்பு
பிரச்னையும் தீர்வும் பகுதிக்கு ; வடமதுரையில் ஆபத்தான நால்ரோடு சந்திப்பு
பிரச்னையும் தீர்வும் பகுதிக்கு ; வடமதுரையில் ஆபத்தான நால்ரோடு சந்திப்பு
பிரச்னையும் தீர்வும் பகுதிக்கு ; வடமதுரையில் ஆபத்தான நால்ரோடு சந்திப்பு
ADDED : ஜூன் 17, 2025 07:52 AM

வடமதுரை : வடமதுரையில் இரு முக்கிய நெடுஞ்சாலைகள் குறுக்கிடும் பகுதியில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கும் ஆபத்தான இடமாக நால்ரோடு பை பாஸ் சந்திப்பு உள்ளது.
வடமதுரை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். 9 வார்டுகள் குக்கிராமங்களிலும் மீதமுள்ள 6 வார்டுகள் நகர் பகுதியிலுமாக அமைந்துள்ளன. திண்டுக்கல்லில் இருந்து 17 கி.மீ., தூரத்தில் இருப்பதால் திருச்சி மார்க்கத்தில் செல்லும் விரைவு பஸ்களின் சேவை இரவு, பகல் என தொடர்ந்து கிடைக்கிறது.
இங்கிருந்து நத்தம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி போன்ற நகரை இணைக்கும் பிரதான ரோடும், ஏ.வி.பட்டி, கொசவபட்டி போன்ற சிறிய ஊர்களுக்கு செல்லும் ரோடுகளும் பிரிந்து செல்கின்றன. 1977ல் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்ந்தபோது வடமதுரை நகருக்கு வெளியே புறவழிச்சாலையாக அமைந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் ரோடு குறுக்கிடும் பகுதியில் அப்போதிருந்தே விபத்துகள் நடக்கின்றன. 2010ல் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட இங்கு மேம்பாலம் அமைக்கப்படும் என மக்கள் கருதிய நிலையில் மேம்பாலம் அமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர். நான்குவழிச்சாலையில் மாறுபட்ட வேகங்களில் சங்கிலி தொடர் போல வாகனங்கள் செல்லும் போது மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. வேக தடுப்புகள் வைத்த பின்னரும் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்தான பகுதியாகவே இந்த நால்ரோடு சந்திப்பு நீடிக்கிறது.
-
* ஆபத்திற்கு வழிவகுக்கிறது
சி.மலையாண்டி, அ.தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர், எஸ்.புதுப்பட்டி: நான்குவழிச்சாலை திட்ட பணியில் திண்டுக்கல் நகரில் இருந்து தேனி, பழநி, கரூர், எரியோடு செல்லும் ரோடுகள் குறுக்கே செல்கின்றன. அவ்விடங்களில் எல்லாம் மேம்பாலம் கட்டியுள்ளனர். இதே போல திண்டுக்கல் - திருச்சி நான்குவழிச்சாலையில் அய்யலுார், நடுப்பட்டி, வையம்பட்டி போன்ற பல ஊர்களில் மேம்பாலம் கட்டியுள்ளனர். ஆனால் இரு நெடுஞ்சாலைகள் குறுக்கிடும் வடமதுரை நால்ரோடு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்காமல் விட்டிருப்பது ஆபத்திற்கு வழிவகுக்கிறது என்றே கூற வேண்டும். இந்த சந்திப்பு வழியே திருச்சியில் இருந்து பழநி செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்கின்றன. இதுதவிர இப்பகுதியில் இரு திசையிலும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் எந்த திசையில் இருந்து எந்த திசை ரோட்டிலும் வாகனங்களில் பயணிக்கும் நிலை இருப்பதால் கடக்கும்போது திக்கு முக்காடும் நிலை உள்ளது.
-
* விபத்து அபாயத்தில் சந்திப்பு
கே.அருள்குமார், வர்த்தக பிரமுகர், குருந்தம்பட்டி: நான்குவழிச்சாலை அமைக்கும் முன்னர் வரை திருச்சி செல்லும் வாகனங்கள் மந்தைகுளக்கரையோரம் இருக்கும் மங்கம்மாள் கேணி ரோடு வழியே நெடுஞ்சாலையில் சேர்ந்து சென்றன. தற்போது நான்குவழிச்சாலையில் அப்பகுதி அடைக்கப்பட்டு மங்கம்மாள் கேணி வழியே செல்லும் திருச்சி இணைப்பு ரோடு ஒருவழியாக மட்டும் பயன்படுகிறது. இந்த ரோட்டில் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டி கிடப்பதால் ஏற்படும் துர்நாற்றம் தவிர்க்க பெரும்பாலான வாகனங்கள் அவ்வழியை பயன்படுத்துவதில்லை. இதனால் தற்போது திருச்சி திசை வாகனங்கள் அனைத்தும் பை பாஸ் நால்ரோடு சந்திப்பு வழியே செல்வதால் கூடுதல் நெரிசல் உள்ளது. இதுதவிர திருச்சியில் இருந்து பழநி செல்லும் வாகனங்கள், தென்னம்பட்டி, பாகா நத்தம், பிலாத்து, கொம்பேரிபட்டி போன்ற கிராம பகுதிகளில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நால்ரோடு சந்திப்பு வழியே குறுக்கிட்டு செல்வதால் போக்குவரத்து அதிகம் உள்ளது. விபத்து ஆபத்தும் அதிகம் உள்ளது.
-
தீர்வு
-
நான்கு வழிச்சாலை திட்ட பணியில் நடந்த தவறான திட்டமிடலால் இங்கு மேம்பாலம் அமைக்காததால் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. வேக தடுப்பு இரும்பு பலகைகளை போலீசார் இப்பகுதியில் வைத்த பின்னர் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதே தவிர விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன. திண்டுக்கல் - சேலம் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் கருக்காம்பட்டி, திண்டுக்கல் சென்னை இடையே மறவனூர் உள்ளிட்ட பல இடங்களில் விபத்துகள் நடந்த பின்னர் மேம்பாலம் கட்டப்பட்டன. அதுபோல வடமதுரை நால்ரோடு சந்திப்பிலும் மேம்பாலம் கட்டுவது அவசியமாகும்.