Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள்

சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள்

சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள்

சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள்

ADDED : ஜூன் 30, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் : சேதமடைந்த ரோடுகள், தேங்கும் சாக்கடை கழிவுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 6வது வார்டு மக்கள்.

திண்டுக்கல் --எம்.வி.எம்.நகர், நேருஜிநகர், பாண்டியன்நகர், பிள்ளையார்பாளையம், எல்.ஐ.சி.காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, பாலாஜிநகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பிள்ளையார் பாளையம் பகுதி தனியார் பள்ளி அருகே கடைகள், வணிக நிறுவனங்களின் குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது.

அங்கு குப்பை தேங்க முறையாக அள்ளுவதில்லை. சிமென்ட் ரோடு பகுதியில் ரோடுகள் சேதமடைந்துள்ளன.

வாகனங்கள் சென்று வருவது சிரமமாக இருக்கிறது. நடந்து சென்றால் கூட தடுக்கி கிழே விழும் சூழல் நிலவுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்கின்றன.

கழிவுநீர் செல்லும் வழிகளில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சிறு மழை பெய்தால் கூட கழிவுநீர் வெளியே வந்து விடுகின்றன. ரோடுகளில் ஓடுவது மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும் நிலை உள்ளது.

தெருகுழாய்களில் குடிநீர் சரிவர வருவதில்லை. சில நேரங்களில் 4 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குப்பையில்லா மாநகராட்சி திட்டத்தின் கீழ் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதால் குப்பையை எங்கு கொட்டுவது என தெரியாமல் கிடைக்கும் காலி இடம், ரோட்டோரங்களில் குப்பை கொட்டப்படுகிறது.

ரோடுகள் சரி இல்லை


சதீஷ்குமார், மாநகர பா.ஜ., தலைவர்: ரோடுகள் மேடு, பள்ளமாக உள்ளது. இந்த ரோடுகளை பயன்படுத்தும் வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள சில மின்கம்பங்களில் மரங்கள் சாய்ந்து விடுகின்றன. மழைபெய்தால், காற்று கொஞ்சம் பலமாக அடித்தால் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்படுவது மட்டுமல்லாமல், அருகில் உள்ள வீடுகளிலும் கிளைகள் விழுந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய வேண்டும்.

சாக்கடைகளை துார்வாருங்க


வேல்முருகன், சிமென்ட் ரோடு பகுதி : சாக்கடைகள் முறையாக பராமரிக்காததால் மண் சேர்ந்து தேங்கி நிற்கிறது.

கொசு உற்பத்தி, சுகாதாரக் கேடு போன்ற சூழல் இருந்தாலும் சிறு மழை பெய்தாலே சாக்கடைகள் நிரம்பி அதன் கழிவு நீர் ரோடுகளில் ரோடுகின்றன. வீடுகளிலும் புகுந்து விடுகின்றன. இதேபோல் பள்ளி அருகே வந்து குப்பையை கொட்டிச் செல்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

குடிநீர் பிரச்னை உள்ளது


முருகேஸ்வரி, பாண்டியன் நகர் : தண்ணீர் பிரச்னை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது.

தெருகுழாய்களில் முறையாக நீர் வருவதில்லை. ஒருவேளை வந்தாலும் குறிப்பிட்ட நேரம் வருகிறது. அது எந்த நேரம் என்பதை அறிந்து கொள்ள முடியவதில்லை. தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.

அனைத்தும் சரிசெய்யப்படும்


சரண்யா, கவுன்சிலர் (தி.மு.க.,): சிமென்ட் ரோடு பகுதியில் பேவர் பிளாக் போடப்பட உள்ளது. அதிகபட்சம் 10 நாட்களுக்குள் பணிகள் தொடங்கி விடும். அதற்கு முன்பாக ஓடைகளை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு பகுதியாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம். குப்பை தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது. பள்ளி அருகே கொட்டுப்படுவது குறித்தும் கவனத்திற்கு வந்துள்ளது. குப்பை அள்ளவில்லை என எவரேனும் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். சிறு, சிறு குறைகள் இருந்தாலும் விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படுகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us