/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பராமரிப்பின்றி குப்பைகளின் கூடாரமான சாமியார்குளம் பராமரிப்பின்றி குப்பைகளின் கூடாரமான சாமியார்குளம்
பராமரிப்பின்றி குப்பைகளின் கூடாரமான சாமியார்குளம்
பராமரிப்பின்றி குப்பைகளின் கூடாரமான சாமியார்குளம்
பராமரிப்பின்றி குப்பைகளின் கூடாரமான சாமியார்குளம்
ADDED : ஜூன் 20, 2024 05:34 AM

திண்டுக்கல்: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர் வழித்தடங்கள் அழிப்பு, திடக்கழிவுகளை கொட்டுதல், மண், கிராவல் கொள்ளை, நிறைந்து கிடக்கும் சீமைக் கருவேல மரங்கள் என ஓர் பெரும் பிரச்னைகளோடு காட்சியளிக்கிறது திண்டுக்கல் சாமியார் குளம்.
திண்டுக்கல் நகரையொட்டிய பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சாமியார் குளம். சிறுமலையில் மழை பெய்தால் அங்கிருந்து வரும் தண்ணீர் தோட்டனுாத்து, நல்லமநாயக்கன்பட்டி, மாலப்பட்டி, சங்கனம் குளத்தை கடந்து பாலகிருஷ்ணாபுரம் கண்மாய்க்கு வந்து சாமியார் குளம் வந்தடையுளம்.
ஆனால் பாலகிருஷ்ணாபுரம் குளமே பாழடைந்து கிடப்பதால் சாமியார் குளத்திற்கு நீர் வரத்து இல்லை. என்.ஜி.ஓ., காலனி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த சாமியார் குளம் இருந்திருக்கிறது.பல ஆண்டுகளாக நீர் இல்லாததால் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. நகர் ,புறநகர் பகுதிகளின் கழிவுகள், குப்பை அதிகளவில் கொட்டப்படுகின்றன. இங்கு மணல் அள்ளியதன் விளைவாக மேடு, பள்ளங்களாக காட்சியளிக்கிறது. சிறு மழை பெய்தால் கூட குளமே சாக்கடை போல் காட்சியளிப்பதை பார்க்க முடியும்.இறந்த விலங்குகளையும் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் கண்மாய் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. கண்மாயை துார் வாரினால்தான் ஓரளவிற்காவது நீர் தேங்கும்
கண்ணுக்கெட்டும் துாரம் வரை கருவேலமரங்கள் காட்சியளிக்கின்றன. பிளாஸ்டிக் அதிகளவில் இருப்பதால் நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
நிலத்தடியில் நீர் செல்ல எந்தவித வாய்ப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. குப்பையை சத்தமில்லாமல் குடியிருப்போர் கொட்டிச் செல்கின்றனர். துார்வார அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் கோரிக்கை வைத்தும் அவை வெறும் மனுக்களாகவே உள்ளன. இதனை துார்வாரினால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். சுற்று விவசாய நிலங்களுக்கும் செழிப்புடன் இருக்கும்.
அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
வரதராஜன், பாலகிருஷ்ணாபுரம் : நீண்டகாலமாக கண்மாயை அதிகாரிகள் பார்வையிடாமல் புறக்கணித்து விட்டனர்.
துார் வாரி 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மண்கள் மேவி குன்று போல் உள்ளது. தண்ணீர் நிற்பதற்கு வழியில்லை. கண்மாயில் கோழி , ஓட்டல் கழிவு, மருந்து கழிவு, வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுவதால் காதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. அதிகாரிகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
பிளாட்களாக மாறி விட்டன
கார்த்திக் வினோத், மாவட்டத் தலைவர், பா.ஜ.,அரசு தொடர்பு பிரிவு: கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழை பெய்தால் தண்ணீர் ஊற்றுகள் பல்வேறு பகுதிகளில் தோன்றும்.
கண்மாயின் நீராதாரத்தை நம்பித்தான் சுற்று பகுதிகளில் பலர் புதிய கட்டடங்களை கட்டினர். நீண்டகாலமாக கண்மாய் வறண்டுள்ளதால் விளை நிலங்கள் தரிசாகிவிட்டன. கண்மாய் பாசனத்தை நம்பியிருந்தவர்கள் விளை நிலங்களை பிளாட்டுகளாக்கி விற்று விட்டனர்.
கருவேல மரங்களை அகற்றுங்க
ரஞ்சித், பாலகிருஷ்ணாபுரம் : கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும். சிலர் விறகிற்காக இந்த மரங்களை வெட்டி செல்கின்றனர். வேரோடு பெயர்த்தெடுக்காமல் விட்டு விடுவதால் மீண்டும் அடர்த்தியாக வளர்ந்து கண்மாயின் உள்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதோடு கண்மாய் முழுவதும் அமல செடிகளும் வளர்ந்துள்ளன.