Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி

குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி

குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி

குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி

ADDED : ஜூன் 19, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
வேடசந்துார் : குடகனாறு ஆற்றின் வழிநெடுகிலும் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் நன்கு வளர்ந்துள்ள சீமை கருவேல முட்களை அகற்றி மழை நீர் போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.

ஆத்துார், திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாறு ஆற்றின் வழி நெடுகிலும் நன்கு வளர்ந்த கருவேல முட்கள் பசுமை போர்த்திய காடாகவே மாறி கிடக்கிறது. இந்த கருவேல முட்களை வழி நெடுகிலும் ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. சீமை கருவேலம் மரத்தை முற்றிலுமாக அழித்தால் நாட்டுக்கு நல்லது என்கின்ற அளவில் தற்போது இதன் மீதான வெறுப்பு உள்ளது. தண்ணீர் இல்லாத வறட்சி காலங்களில் கூட இந்த மரங்கள் காய்வதே இல்லை.

காற்றின் ஈரப்பதத்தைக் கூட உறிஞ்சி தன்னோட வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திறன் இந்த மரங்களுக்கு உண்டு. இதனால் இதை சுற்றிய செடிகள் கூட காய்ந்து விடும்.

இந்த மரத்தில் பறவைகள் கூடு கூட கட்டாது. இவ்வளவு தீமைகள் நிறைந்த இந்த மரங்கள் தமிழகத்தின் 25 சதவீத நிலத்தை ஆக்கிரமித்துள்ளன.இதை வெட்டி எடுத்து விட்டால் மற்ற செடிகள் பசுமையாக வளரும். ஆத்துார் முதல் அழகாபுரி, வள்ளிபட்டி கூம்பூர் எல்லை வரை குடகனாறு ஆற்றில் உள்ள கருவேல முட்களை முற்றிலுமாக அகற்றி நீர் வரத்து எளிமையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தை நாடுவோம்


த.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர், வேடசந்துார்: குடகனாறு மட்டுமின்றி அதன் உப ஆறுகளான சந்தனவர்த்தினி ஆறு, மாங்கரை ஆறு, வரட்டாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் கருவேலன் முட்கள் நிறைந்து காணப்படுகிறது.ஆறு என்பதே தெரியாத அளவிற்கு முள் மர காடாக காட்சியளிக்கிறது. குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் 3 கி.மீ., துாரத்திற்கு 2023ல் முட்களை அகற்றி விட்டோம். தற்போது அதே இடத்தில் மீண்டும் முட்கள் நன்கு வளர்ந்து விட்டது.

அடுத்த வாரம் கலெக்டரிடம் இது குறித்து புகார் அளிக்க உள்ளோம். ஆற்றுப்பகுதியில் உள்ள முட்களை பிடுங்காவிட்டால் உயர்நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை.

தண்ணீர் செல்ல வழி இல்லை


எம்.சக்திவேல், மரம் வியாபாரி, ஆத்துப்பட்டி, தாடிக்கொம்பு : குடகனாறு முழுக்க கருவேல முட்கள் தான் நிறைந்துள்ளது. ஆற்றுப் பகுதியில் ஆடு, மாடு மேய்க்க கூட வழியில்லை. இடைப்பட்ட பகுதியில் ஆற்றைக் கடந்து யாரும் மறுபக்கம் செல்ல முடியாது. மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கூடுதலான நீர் வரத்து வந்தாலும் தண்ணீர் முறையாக செல்ல வழி இல்லை. 1977 ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை போல் மீண்டும் ஒரு முறை கூடுதலான தண்ணீர் வந்தால் பல இடங்களில் பாதிப்பு ஏற்படும். அதற்கு முன்கூட்டியே ஆற்றில் உள்ள கருவேல முட்களை அகற்ற வேண்டும். நீர்வரத்து பாதைகள் சரியாக இருந்தால் தான் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். மக்கள் நலன் கருதி கருவேல முட்களை ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும் .

சட்டசபையில் குரல் கொடுங்க


எஸ்.ஆறுமுகம், சமூக ஆர்வலர், பாளையம்: ஆற்றுப்பகுதி மட்டுமின்றி குளங்கள், வரத்து கால்வாய்கள் என ஒட்டுமொத்தமாக கருவேல முட்களை அகற்ற வேண்டும்.

அகற்றாமல் விட்டால் இன்னும் 10, 20 ஆண்டுகளில் கருவேல முட்கள் பெருகி எங்கு பார்த்தாலும் முள் காடாகவே மாறிவிடும். இப்போதே ரோட்டை விட்டு கீழே இறங்க முடியவில்லை. ஒரு காலத்தில் மக்களின் விறகு பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட இந்த கருவேல முட்கள் தற்போது விவசாயத்திற்கும் பொது மக்களுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் கருவேல முட்களை ஒட்டுமொத்தமாக அழிக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும். வருகிற சட்டசபை கூட்டத்திலே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us