ADDED : ஜூலை 19, 2024 05:33 AM

வடமதுரை : அய்யலுார் இந்தியன் வங்கியில் மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போன்றே வரிசையில் நின்று வங்கி சேவைகளை பெற வேண்டும் என சிரமத்திற்குள்ளாகுதல், ஏ.டி.எம்., வங்கிக்கான பாதைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆபத்தாக இருப்பது, கடன் வழங்காமல் அலைகழிப்பு செய்வதுடன் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவது உள்ளிட்ட பிரச்னை கண்டித்து வங்கி முன் முற்றுகை போராட்டம் நடந்தது.
அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஒன்றிய தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, செயலாளர் பகத்சிங், ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் குணசேகரன் பங்கேற்றனர். வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்த குறைகளை சரிசெய்வதாக வங்கி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுற்றது.