/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களே இல்லாத அரசு பள்ளி தலைமையாசிரியரை மாற்ற முற்றுகை மாணவர்களே இல்லாத அரசு பள்ளி தலைமையாசிரியரை மாற்ற முற்றுகை
மாணவர்களே இல்லாத அரசு பள்ளி தலைமையாசிரியரை மாற்ற முற்றுகை
மாணவர்களே இல்லாத அரசு பள்ளி தலைமையாசிரியரை மாற்ற முற்றுகை
மாணவர்களே இல்லாத அரசு பள்ளி தலைமையாசிரியரை மாற்ற முற்றுகை
ADDED : ஜூன் 19, 2024 06:35 AM

குஜிலியம்பாறை : பண்ணைப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்கள் இல்லாத நிலையில் 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த ஊர் மக்களோ பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றினால் உடனே 5 மாணவர்களை சேர்க்கிறோம் என்று கூறி பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.குஜிலியம்பாறை ஒன்றியம் வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1962 முதல் சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளியில் 2022- -23 கல்வியாண்டில் 8 மாணவர்கள் படித்தனர். 2023ல் இப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா பொறுப்பேற்றார். எட்டு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியரும் பணியில் உள்ளார். ஊர் மக்கள் சார்பில் முதல் முறையாக எல்.இ.டி., டிவி., வாங்கி வைக்கப்பட்டது ஒன்றிய அளவில் இந்த பள்ளியில் தான்.
மேலும் டேபிள், சேர், பீரோ, மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவர்களுக்கான பதாகைகளை தொங்க விடுதல் என பள்ளி சிறப்பாக செயல்பட்டு வந்தது. தலைமை ஆசிரியர் இந்திராவின் வருகை பிறகு தலைமை ஆசிரியரின் பேச்சு உள்ளிட்ட செயல்பாடுகளை பிடிக்காமல் பெற்றோரிடம் மாணவர்கள் கூற, பெற்றோர்கள் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரியிடம் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி புகார் அளித்தனர். இருந்தும் முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குஜிலியம்பாறை தனியார் பள்ளியில் சேர்த்தனர்.இதனால் தற்போது பண்ணைப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லை.ஆனால் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இருவரும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். உதவி ஆசிரியர் மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ஊர் பொதுமக்கள் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றக் கோரி பள்ளியின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தலைமை ஆசிரியரை மாற்றினால் மறுநாளே 5 மாணவர்களை பள்ளியில் சேர்க்கிறோம் என பொதுமக்கள் கூறினார்.குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து கூறுகையில்,'' ஊர் பொதுமக்கள் சார்பில் தலைமை ஆசிரியரை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த தகவலை மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன் '' என்றார்.பண்ணைப்பட்டி ஊர் முக்கியஸ்தர் ராமன் கூறுகையில்,'' பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி ஏற்கனவே மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்து விட்டோம். நடவடிக்கை இல்லாததால் தான் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்து விட்டோம். தற்போது பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லை. பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றினால் மறுநாளே 5 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கல்வி ஆண்டிலும் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுவார்'' என்றார்.