Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்

சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்

சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்

சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்

ADDED : ஜூன் 18, 2024 11:40 AM


Google News

தென்னிந்திய ஹாக்கி போட்டி தமிழக அணி வீரர்கள் வெற்றி


தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய அளவிலான, 3 நாள் ஹாக்கி போட்டி கடந்த, 15 அன்று தொடங்கியது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த, 18 அணிகளை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதி போட்டியில், தமிழ்நாடு சார்பாக பாலக்கோடு அணியும், பாண்டிச்சேரி அணியும் மோதின. போட்டி முடிவில், 4 க்கு, 5 என்ற கோல் கணக்கில் பாலக்கோடு அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. பாண்டிச்சேரி அணி, 2ம் இடமும், 3ம் இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி, பேளாரஹள்ளி பஞ்., மன்ற தலைவர் மாரியப்பன், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், ஆகியோர் சுழற்கோப்பை வழங்கி பாராட்டினர்.

தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்றத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடத்துாரிலுள்ள மன்ற அலுவலகத்தில் தலைவர் பாவலர் மலர்வண்ணன் தலைமையில் நடந்தது. பாவலர் முல்லையரசு, கூத்தப்பாடி பழனி, நுாலகர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தமிழ்மகன் இளங்கோ வரவேற்றார்.

கூட்டத்தில் ஆண்டு விழாவையொட்டி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கவிதை போட்டி, மன்றத்தின் சார்பில் மின்னிதழ் வெளியிடுதல், மாவட்டத்தில் சிறந்து விளங்கும் கவிஞர் ஒருவருக்கு விருது வழங்கி சிறப்பிப்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்ற பொருளாளர் கவிஞர் மதனகோபாலன் நன்றி கூறினார்.

விபத்தில் முன்னாள் பஞ்., தலைவர் உயிரிழப்பு


காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மோளையானுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 41; இவர் கடந்த, 2014ல் மோளையானுார் பஞ்., தலைவராக இருந்தார். மேலும், அ.தி.மு.க.,வில் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவராக பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த, 15 அன்று பெரியாம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றார்.

பின், மறுநாள் 16ல் காலை, 6:15 மணிக்கு தன் ஹீரோ போனிக்ஸ் 125 பைக்கில், கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். அப்போது, தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பூலாப்பட்டி ஆத்துப்பாலம் பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தொடர்ந்து, சிகிச்சையில் இருந்தவர் மாலை, 3:15 மணிக்கு உயிரிழந்தார். கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரின் மனைவி கவிதா புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தோரை ஜி.ஹெச்.,ல் சேர்த்த எம்.எல்.ஏ.,


அரூர்: அரூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அவர்களை தன் காரில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பொய்யப்பட்டி - அனுமன்தீர்த்தம் சாலையில், சட்டையம்பட்டி பிரிவு ரோடு அருகே, நேற்று காலை, 8:30 மணிக்கு ஒமலுாரில் இருந்து தீர்த்தமலை நோக்கி சென்ற காரும், எதிரே தும்பலில் இருந்து திருப்பத்துார் நோக்கி வந்த காரும் மோதியது. இதில், 5 பேர் காயமடைந்தனர்.

அப்போது, அந்த வழியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அரூர், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் காரில் சென்றார். விபத்தில், 5 பேர் காயமடைந்து இருப்பதை கண்ட அவர், காரை நிறுத்தக் கூறினார். பின், காயமடைந்தவர்களை மீட்டு, தன் காரில் ஏற்றி கொண்டு அவர்களை, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பசு மாடுகளை திருடி விற்ற 6 பேர் கைது


தர்மபுரி: மாரண்டஹள்ளி சுற்றுவட்டாரத்தில், பசு மாடுகளை திருடி விற்ற, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த பன்னிஹள்ளியை சேர்ந்த விவசாயி அங்கப்பன், 72; இவர் பசு மாடுகள் வளர்த்து வந்தார். கடந்த, 14 ல் தன் விவசாய நிலத்திலுள்ள மாட்டு கொட்டகையில், 2 பசுமாடுகளை கட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

மறு நாள் அவற்றை காணவில்லை. அவர் புகார் படி, மாரண்டஹள்ளி போலீசார், மாரண்டஹள்ளி அடுத்த சந்திராபுரம் முரளிதாஷ், 22, வெலாங்காடு சக்திவேல், 24, அஜீத், 23, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தனுஷ், 25, முருகேசன், 44, பாலநாயக்கனஹள்ளி சேட்டு, 26 ஆகியோரிடம் விசாரனை செய்ததில், 6 பேரும் கூட்டாக மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் மினி சரக்கு வாகனம் மூலம், பசு மாடுகளை திருடி, வெளியூர் சந்தைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த, 2 மாடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள், 6 பேரையும், பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us