ADDED : பிப் 24, 2024 03:50 AM
வெயில் தாக்கம் அதிகரிப்பு
தர்பூசணி விற்பனை ஜோர்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலுக்கு இதமாக, சாலையோர பகுதிகளில் பழவகைகள், ஜுஸ்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரூர் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அருகில், மொரப்பூர், கம்பைநல்லுார், அனுமன்தீர்த்தம் பகுதியில், விவசாயிகளிடமிருந்து தர்பூசணி பழங்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். வர்ணதீர்த்தம், நான்குரோடு உள்ளிட்ட இடங்களில், கரும்பு ஜூஸ், இளநீர், முலாம் பழங்கள் விற்பனை
செய்யப்படுகிறது.
தேசிய வேளாண் சந்தை மூலம்1,096 கிலோ மஞ்சள் விற்பனை
தர்மபுரி: தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், 1,096 கிலோ மஞ்சள் விற்பனையானது.
தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும், மஞ்சள் ஏலம் நடக்கிறது. இந்த ஏல மையத்தில், எவ்வித கமிஷனும் இன்றி விற்பனை நடப்பதால், விவசாயிகள் ஏலத்தில் கலந்து கலந்துகொண்டு பயனடையலாம் என, விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த, 21 அன்று நடந்த மஞ்சள் ஏலத்தில், மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், மஞ்சள் விற்பனையானது. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக, 13,049 ரூபாய், உருளை மஞ்சள் குவிண்டால், 11,549, பனங்காளி மஞ்சள் குவிண்டால், 18,269 என, மொத்தமாக, 19 மூட்டைகளில், 1,096 கிலோ மஞ்சள், 1,34,041 ரூபாய்க்கு விற்பனையானது.
இவ்வாறு கூறினார்.
கோரிக்கைகளை வலியுறுத்திவி.சி.க., ஆர்ப்பாட்டம்தர்மபுரி: லோக்சபா தேர்தலில், ஓட்டு இயந்திரங்களை பயன்படுத்தாமல், பழைய ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, தர்மபுரியில் வி.சி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வி.சி., தலைமை நிலைய செயலர் தகடூர் தமிழ்செல்வன், மண்டல துணை செயலர் மின்னல் சக்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ., முறைகேடு செய்வதாகவும், அதனை தடுப்பதற்கு நாடு முழுவதும் வரும் லோக்சபா தேர்தலில், இ.வி.எம்., இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, பழைய ஓட்டு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர்கள் சாக்கன், பண்டியன், கருப்பண்ணன் மற்றும் மா. கம்யூ., - தி.க., முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினர், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி உழவர் சந்தையில்காய்கறி விலை உயர்வு
தர்மபுரி-
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில், சில காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, ஐந்து உழவர்சந்தைகளில், சில காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, ஒரு கிலோ முருங்கைக்காய், 90, இஞ்சி, 124, ப்ராக்கோலி, 126, எலுமிச்சை, 140, டபுள் பீன்ஸ், 110 என, இவற்றின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் கேரட், 52 ரூபாய், பட்சை பட்டாணி, 74, குடை மிளகாய், 62, சேனை மற்றும் கருணை கிழங்கு, 88 ரூபாயக்கு விலை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக உடைத்த பூண்டு கிலோ, 340 ரூபாய், பெரிய பூண்டு, 280 ரூபாய்க்கு விற்பனையானது.
தனியார் நிறுவன ஊழியர் பலி
போலீசாரிடம் வாக்குவாதம்
ஓசூர், பிப். 24-
ராயக்கோட்டை அடுத்த வெள்ளிச்சந்தையை சேர்ந்த வெங்கடேஷ், 45, தனியார் நிறுவன ஊழியர்; இவரும், யூ.கொத்தப்பள்ளியை சேர்ந்த கோவிந்தப்பா, 45, என்பவரும் நேற்று மதியம், 3:15 மணிக்கு கெலமங்கலம் நோக்கி டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் சென்றனர். நெல்லுார் பஸ் ஸ்டாப் அருகே முன்னால் சென்ற யமகா பைக்கை முந்தி செல்ல முயன்ற போது, பைக்கில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, முன்னால் சென்ற பைக்கில் இருந்த சிலிண்டர் சாலையில் விழுந்ததில், வெங்கடேஷ் சிலிண்டர் மீது மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த கோவிந்தப்பா, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தான் வெங்கடேஷ் உயிரிழந்ததாகவும், வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, சடலத்தை எடுக்க விடாமல் அவரது
உறவினர்கள் சிறிது நேரம் போலீசாருடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.