ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 17 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 17 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 17 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : ஜூன் 03, 2024 11:41 PM

புதுடில்லி: நம் நாட்டில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 17 பேர், இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவது, சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க கற்றுத் தருவது போன்ற சதித் திட்டங்களில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நம் நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை ஒடுக்க, 2023 நவம்பரில் என்.ஐ.ஏ., வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியது.
விசாரணையின் போது, அந்த அமைப்பினர் நம் நாட்டில் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை தயாரித்தது தெரிய வந்தது.
மேலும், ஐ.எஸ்., அமைப்பு தொடர்பான பத்திரிகைகளை வினியோகித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நம் நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விடவும், மதச்சார்பற்ற நெறிமுறைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளை அழிக்கவும் திட்டமிட்டு, தங்கள் பணிகளை மேம்படுத்த அவர்கள் தீவிரமாக நிதி திரட்டுவது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது, 2023 மார்ச்சில் என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் பின் கைது செய்யப்பட்ட 17 பேர் மீது, டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதன் வாயிலாக, கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் அனைவரும், இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவது, சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க கற்றுத் தருவது, நிதி திரட்டுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.