/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கி அதிகரிப்பு அரூர் மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கி அதிகரிப்பு
அரூர் மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கி அதிகரிப்பு
அரூர் மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கி அதிகரிப்பு
அரூர் மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கி அதிகரிப்பு
ADDED : ஜூன் 01, 2025 12:55 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வருவாய் கோட்டத்தில், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அரூர் என, நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இவற்றையொட்டி, சித்தேரி, கோட்டப்பட்டி உட்பட 60க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள காடுகளில், மான், காட்டுப்பன்றி, காட்டெருமை அதிகளவில் உள்ளன. நாட்டு துப்பாக்கிகளை தயார் செய்து, கள்ளத்தனமாக இவற்றை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், சித்தேரியிலுள்ள மண்ணுார் கிராமத்தில் வேட்டைக்கு சென்ற ஒருவரும், கீழானுாரில், நிலத்தகராறில் ஒருவரும், கள்ளத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மே 25ல் கலசப்பாடியை சேர்ந்த கிருஷ்ணன், 51, வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அரூர் பகுதி காடுகளில், தினமும் இரவில் கள்ளத்துப்பாக்கியால் வேட்டையாடும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன. இவற்றை வனத்துறையினரும், போலீசாரும் கண்டுகொள்ளாததால், வன வேட்டை சர்வசாதாரணமாக நடக்கிறது. போலீஸ், வனத்துறையினர் இணைந்து, நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் கூறுகையில், ''மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது குறித்து, வனத்துறையினருடன் இணைந்து, அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறோம். வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளையும் கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.