/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் - கீரப்பாளையம் சாலை விரிவாக்க பணி... மந்தம்; அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி விபத்து சிதம்பரம் - கீரப்பாளையம் சாலை விரிவாக்க பணி... மந்தம்; அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி விபத்து
சிதம்பரம் - கீரப்பாளையம் சாலை விரிவாக்க பணி... மந்தம்; அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி விபத்து
சிதம்பரம் - கீரப்பாளையம் சாலை விரிவாக்க பணி... மந்தம்; அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி விபத்து
சிதம்பரம் - கீரப்பாளையம் சாலை விரிவாக்க பணி... மந்தம்; அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி விபத்து
ADDED : ஜூன் 08, 2024 04:59 AM

சிதம்பரம் : சிதம்பரம்- புவனகிரி சாலையில், வயலுாரில் இருந்து கீரப்பாளையம் வரையிலானவிரிவாக்கப்பணி மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவ்வப்போது விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
சிதம்பரம் - புவனகிரி சாலையில், மணலுார் அடுத்துள்ள வயலுாரில் இருந்து கீரப்பாளையம் வரையில், சாலை வரிவாக்கம் செய்ய, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த ஜனவரியில், அமைச்சர் பன்னீர்செல்வம் பணியை துவக்கி வைத்தார்.
ஆனால், சாலையின் இருபுறமும் மரங்கள் அகற்றுவது, சாலையோர இடங்களை மீட்பது மற்றும் மின்துறையினர், மின் கம்பங்கள் அப்புறப்படுத்தி, மாற்று இடத்தில் வைப்பது போன்ற பணிகளில் பல்வேறு தடைகள் ஏற்பட்டது. இதனால், பணிகள் துவங்கிய ஓரிரு நாட்களில் நிறுத்தப்பட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இச்சாலையில், பணிகளை மேற்கொள்வதில், சரியான திட்டமிடல் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. அதையடுத்து, ஒரு மாத இடைவெளியில் மீண்டும் பணிகள் துவங்கியது. ஆனாலும், பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர் ஆர்வம் காட்டவில்லை. குறைந்த பணியாளர்கள், இயந்திரங்களை கொண்டு பணிகள் செய்ததால், ஆமை வேகத்தில் சாலை பணி நடந்து வருகிறது.
பணிகள் விரைந்து முடியாததால், அடிக்கடி விபத்துக்கள் நடப்பதும், போக்குவரத்து பாதித்து, வாகன ஓட்டிகள் தவிப்பதும் வாடிக்கையாகியது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. சமூக அமைப்பினரும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனாலும், முழு வீச்சில் பணிகளை மேற்கொள்ளவில்லை. 1 மற்றும் 2 பொக்லைன் மூலமாக பணிகள் நடைபெற்று வருவதால் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதோடு, அதிக நாள் இழுத்து வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளோ, அட்சியத்தில் குறட்டையிலேயே உள்ளனர்.
ஏற்கனவே பணிகள் மந்தமாக நடந்துவரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக சாலையின் இருபுறமும் ஜல்லி கொட்டியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறுகிய பகுதிகளில் எதிரெதிர் திசையில் வாகனங்கள் செல்வதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் அச்சத்தில் செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
முறையாக பணிகள் மேற்கொள்ளாததால் தினம் தினம் விபத்துகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 4 மாதங்களில் 12க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது.
பள்ளி, கல்லுாரிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், இச்சாலை பணி முடியாததால், மேலும் நெருக்கடி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆயிரக்கணக்கில் வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையான கீரப்பாளையம் சாலைப் பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர், நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பணிகளை முடுக்கி விட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.