/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீராணத்தில் 1,360 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு! சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்புவீராணத்தில் 1,360 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு! சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
வீராணத்தில் 1,360 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு! சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
வீராணத்தில் 1,360 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு! சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
வீராணத்தில் 1,360 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு! சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜூன் 16, 2024 10:51 PM
கடலுார் : சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்ல கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வீராணம் ஏரியில் 1,360 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு வைக்கப்படுகிறது. வீராணம் ஏரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி 15.60 அடி அளவில் 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்படும் பெரிய ஏரி. வீராணம் ஏரி மூலம் டெல்டா பகுதியில் 49,440 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுத்து செல்வதால், வீராணம் ஏரி மெட்ரோ வாட்டர் வசம் ஆனதால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வறண்டு காணப்படுகிறது. இதனால் ஏரியை துார்வார விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் சென்னை குடிநீருக்கு ஆதாரங்களாக விளங்கும் நீர்தேக்கங்களில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து 50 சதவீதம் அளவில் தண்ணீர் இருப்பு இருந்தது. இதனால் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க கடந்த மே மாதம் அரசு ஆணை வெளியிடப்பட்டன.
அதன் அடிப்படையில் மேட்டூர் அணையில் தண்ணீர் மட்டம் குறைவாக இருந்த நிலையிலும், அணையில் அருந்து சென்னை குடிநீருக்காக 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டன.
மேட்டூர் தண்ணீர் முக்கொம்பு, கல்லணை வழியாக அணைக்கரை கீழணைக்கு கடந்த 25ம் தேதி வந்தடைந்தது. சென்னை குடிநீருக்காக 26ம் தேதி முதல் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரிக்கு கடந்த 20 நாட்களாக தொடர்ந்து தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது.
தற்போது வீராணம் ஏரியில் நீர் மட்டம் 46.75 அடியில் 1,360 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியை சுற்றி உள்ள 21 பாசன வாய்க்கால் மதகுகள் மூடி சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக துளி அளவு தண்ணீர் கசியாத அளவிற்கு பொதுப்பணத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கவில்லை. இதனால் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்டா பகுதி வழியாக சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்ல மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, வீராணம் ஏரி நிரப்பி வைக்கப்படுகிறது. இதனால் டெல்டா விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.