ADDED : ஜூன் 19, 2024 11:19 PM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி புதுத்தெருவில் புதியதாக போடப்பட்ட சாலை 6 மாதத்தில் வீணாகியதால் பொதுக்கள் அதிருப்தியடைந்தனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் பல கோடி மதிப்பில் 30 வார்டுகளிலும் 6 மாதத்துக்கு முன் சிமென்ட் சாலைகள் போடப்பட்டன. அதிகாரிகள் முறைப்படி ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டியதால், சாலைகள் தரமில்லாமல் போட்டனர். மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்ளவில்லை.
இதுபற்றி பல்வேறு புகார் எழுந்தது. அப்போது பணியில் இருந்த இன்ஜினியர் பாரதி தரமில்லாத சாலைகளை புதுப்பித்தால் மட்டுமே ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்படும் என கூறினார். அதனால் பங்களா தெரு, ராமு தெருவில் பாதியளவு சாலைகளை மீண்டும் போட்டனர். இதற்கிடையே, இன்ஜினியர் பாரதி கடலூர் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். அதோடு, தரமில்லாத சாலைகளை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் புதுத்தெருவில் 6 மாதத்துக்கு முன் போடப்பட்ட சாலை கந்தலாகி, மக்கள் நடமாட முடியாத அளவில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளது. வாகனங்கள் செல்லும்போது புழுதி பரப்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக போடப்பட்ட பல சாலைகள் இதே நிலையில் தான் உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள், நெல்லிக்குப்பம் பகுதியில் புதியதாக போடப்பட்ட சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.