ADDED : ஜூலை 21, 2024 05:28 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே குறுகிய வளைவு பால வாய்க்காலில், கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த பரிதுாரை சேர்ந்தவர் முரளிதரன் மகன் வெங்கட்ராமன்,21; சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.இ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு தனது காரில் ஊருக்கு புறப்பட்டார். இவருடன் சக கல்லுாரி நண்பர்களான கும்பகோணம் காவேரி நகர் சந்திரசேகரன் மகன் குணபாலன்,23; செந்தமிழ்செல்வன் மகன் ஹரிபிரகாஷ்,21; ஆகியோர் உடன் வந்தனர். காரை வெங்கட்ராமன் ஓட்டினார்.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி அருகே குறுகிய வளைவு பாலத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தில் இருந்து வாய்க்காலில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய காரில் இருந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்தவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.