ADDED : மார் 13, 2025 12:43 AM
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாசி மாதத்தையொட்டி, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி ஆகிய 6 மாதங்களில், 6 முறை மகாபிஷேகம் நடக்கிறது. அதன்படி நேற்று மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில், மாலை 6:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்டவைகளால் மகாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.
முன்னதாக, காலை 9:00 மணிக்கு லட்சார்ச்சனை, 10:00 மணிக்கு மஹா ருத்ர பாராயணம், மதியம் 2:00 மணிக்கு யாகசாலையில் மஹா ருத்ர ஜப ஹோமம் வஸோர்தாரை மற்றும் சுவாஸினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடந்தது.
மாலை 6:00 மணிக்கு மேல் கனகசபையில் மகா ருத்ரஜப மகாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.