ADDED : செப் 21, 2025 11:25 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் ஜோதிபுரம் வரை, 1.6 கி.மீ., துாரத்துக்கு, 115 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் சரியாக திட்டமிட்டு கட்டப்படாததால், சிறு மழைக்கு கூட ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது.
இதற்கு தீர்வு காண, மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள துளைகள் வாயிலாக குழாய்கள் அமைக்கப்பட்டு, மழைக்காலத்தில் பெய்யும் நீர், கீழ்பகுதிக்கு சேர்க்கப்பட்டது.
சரிவர குழாய் அமைக்காததால், மழை பெய்யும்போது, மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவியென கீழ்நோக்கி கொட்டுகிறது. நடந்து செல்வோரும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் அவதிப்படுகின்றனர்.
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. அருண்குமார் கூறுகையில், ''மழை நீர் வடிவதற்கான குழாயை சரிவர அமைக்காததால், மேம்பாலத்தில் இருந்து கீழே கொட்டுகிறது. மேம்பாலத்தின் மேல் பகுதியில் இரவு நேர விளக்குகள் இல்லை. இரவில் செல்வோர் சிரமப்படுகின்றனர். இரவு நேர விளக்குகள் அமைக்கவும், பில்லுார் குடிநீர் குழாயை மாற்றியமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட்டது. இதுவரை பணிகள் மேற்கொள்ளவில்லை,'' என்றார்.