/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அவசரம் அவசரமாக நிறைவேற்றிய யு.ஜி.டி., சொத்து வரி கட்டணங்கள் ஒத்திவைப்பு!அவசரம் அவசரமாக நிறைவேற்றிய யு.ஜி.டி., சொத்து வரி கட்டணங்கள் ஒத்திவைப்பு!
அவசரம் அவசரமாக நிறைவேற்றிய யு.ஜி.டி., சொத்து வரி கட்டணங்கள் ஒத்திவைப்பு!
அவசரம் அவசரமாக நிறைவேற்றிய யு.ஜி.டி., சொத்து வரி கட்டணங்கள் ஒத்திவைப்பு!
அவசரம் அவசரமாக நிறைவேற்றிய யு.ஜி.டி., சொத்து வரி கட்டணங்கள் ஒத்திவைப்பு!
ADDED : ஜூன் 27, 2025 11:19 PM

கோவை; கோவை மாநகராட்சியில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர பராமரிப்பு கட்டணத்தை மாற்றியமைத்து, கடந்த மே மாதம் அவசர அவசரமாக நிறைவேற்றிய தீர்மானங்கள், நேற்று நடந்த கூட்டத்தில், ஒத்திவைக்கப்பட்டது.கவுன்சிலர்களுடன் கலந்தாலோசிக்காமல், அவசரமாக நிறைவேற்றிய தீர்மானங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இந்த நிகழ்வு, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மட்டுமின்றி, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மத்தியிலும் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியில், மே 14ல் அவசர கூட்டம் நடத்தியபோது, 'ஆல்-பாஸ்' முறையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'டேபிள் சப்ஜெக்ட்'டாக, 101, 102 மற்றும், 103 ஆகிய மூன்று தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
கவுன்சிலர்கள் படித்துப் பார்ப்பதற்கு முன்பாகவே, தீர்மானங்கள் நிறைவேறியதாக மேயர் அறிவித்தார். அது, விமர்சனத்துக்கு உள்ளாகியது.
ஏனெனில், 101வது தீர்மானம் பாதாள சாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை, மாதாந்திர கட்டணம் உயர்த்துவது; 102வது தீர்மானம் குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை, மாதாந்திர கட்டணம் உயர்த்துவது; 103வது தீர்மானம், 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தும் சூயஸ் நிறுவனத்துக்கு கூடுதல் தொகை வழங்குவது என குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்து கேட்ட மேயர்
பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கருத்து தெரிவிக்க, மேயர் ரங்கநாயகி வேண்டுகோள் விடுத்தார்.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்த்துவது தொடர்பான தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டுமென, காங்., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., - ம.தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மேயர் ரங்கநாயகி பதிலளிக்கையில், ''கடந்த மாதம் நிறைவேற்றிய, 101, 102, 103 ஆகிய தீர்மானங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. என்ன செய்யலாம் என அமைச்சரிடம் விவாதித்து, அடுத்த மாத கூட்டத்தில் அறிவிக்கப்படும்,'' என்றார்.
குழாய் பழுதடைந்தால், புதிதாக மாற்றுகிறோம். பாதாள சாக்கடை இணைப்பு பெற்றவர்கள், இவ்வளவு நாட்களாக பணம் கொடுக்காமல் இருந்தார்கள். விதிமுறைக்கு உட்பட்டு புத்தகம் வழங்கப்படுகிறது.
- சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி கமிஷனர்