Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதையில் வாகனம் ஓட்டினால் 'பழுக்கும்' அபராதம்; ரூ.2.50 கோடி வசூலித்த போக்குவரத்து போலீசார்

போதையில் வாகனம் ஓட்டினால் 'பழுக்கும்' அபராதம்; ரூ.2.50 கோடி வசூலித்த போக்குவரத்து போலீசார்

போதையில் வாகனம் ஓட்டினால் 'பழுக்கும்' அபராதம்; ரூ.2.50 கோடி வசூலித்த போக்குவரத்து போலீசார்

போதையில் வாகனம் ஓட்டினால் 'பழுக்கும்' அபராதம்; ரூ.2.50 கோடி வசூலித்த போக்குவரத்து போலீசார்

ADDED : மார் 25, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
கோவை; மது போதையில் வாகனம் ஓட்டியோரிடம் இருந்து, ரூ.2.50 கோடிக்கு மேல் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்துள்ளனர்.

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து, இறப்பு நிகழ்வது தமிழகத்தில் தான் என, புள்ளி விபரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும், போக்குவரத்து விதி மீறலால் விபத்துகள் நேரிட்டு, உயிரிழப்பு அதிகரிப்பது தெரிந்தது.

இதை கட்டுப்படுத்த, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், போக்குவரத்து விதிமீறல்கள், அதனால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கின்றன. எனவே, அபராத தொகையை அதிகரித்து விபத்துகளை குறைக்க, மத்திய அரசு, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, 2019ல் அபராத தொகையை பன்மடங்கு உயர்த்தியது.

2022, அக்., மாதம் தமிழக அரசு, மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தின்படி, மது போதையில் வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

கோவையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியது குறித்து, 2019 முதல் தற்போது வரை, 14 ஆயிரத்து, 630 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இவற்றில் பல வழக்குகளில், வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தவில்லை. இதையடுத்து வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகளை, போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''மதுபோதையில் வாகனம் ஓட்டி, வழக்கு பதியப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அபராதம் செலுத்த வலியுறுத்தப்படுகிறது. தினமும், 1,000 பேருக்கு தொடர்பு கொண்டால், 100 பேர் வரை நேரில் வருகின்றனர்.

அவர்களிடம் பேசி, நடமாடும் நீதிமன்றங்கள் வாயிலாக அபராதம் செலுத்த வைக்கிறோம். நடமாடும் நீதிமன்றம் வந்த பின், அபராதம் செலுத்தும் நடவடிக்கை வேகமெடுத்துள்ளது.

கோவை மாநகரில், வாரம் மூன்று நாட்கள் நடமாடும் நீதிமன்றம் வாயிலாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதுவரை, 2,497 வழக்குகளில் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தியுள்ளனர். இதன் வாயிலாக, ரூ.2.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகளையும் முடிக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.

வழக்குகள் விபரம்


(கடந்த 2019 முதல், டிச., 2024 வரை)
மொத்த வழக்குகள் 14,630
தீர்வு காணப்பட்டவை 1,288
மீதமுள்ளவை 13,342
நடப்பாண்டு பதிவானவை 1,898
தீர்வு காணப்பட்டவை 1,209
மீதமுள்ளவை 689







      Our Apps Available On




      Dinamalar

      Follow us