ADDED : செப் 09, 2025 10:26 PM

அன்னுார்; அன்னுார் அரசு துவக்கப்பள்ளிக்குள் நுழைந்த குரங்குகள் பள்ளி மாணவியை கடித்தன.
அன்னுாரில், கோவை சாலையில், அ.மு.காலனியில், 40க்கும் மேற்பட்ட குரங்குகள் திரிகின்றன. கூட்டம் கூட்டமாக திரியும் குரங்குகள் அனைவரையும் துரத்தி அச்சுறுத்துகின்றன. இந்நிலையில், நேற்று, அன்னுார் தெற்கு துவக்கப் பள்ளியில், மதிய உணவு இடை வேளையில் சில குரங்குகள் பள்ளிக்குள் நுழைந்தன.
அங்கு மூன்றாம் வகுப்பு படித்து வரும் பீகாரை சேர்ந்த மாணவி சலீமா காத்துனை துரத்தி முதுகு பகுதியில் கடித்தன. இதை பார்த்து அலறி அடித்துக் கொண்டு மதிய உணவு இடைவேளைக்கு வந்திருந்த பெற்றோரும், மாணவர்களும் ஓடினர். இதில் ஒரு பெண்ணும் ஒரு மாணவியும் கீழே விழுந்தனர். இதையடுத்து அனைவரும் துரத்தியதில் குரங்குகள் வெளியேறின. குரங்கு கடிபட்ட சலீமா காத்தூன் அன்னுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நான்கு டோஸ் தடுப்பூசி குறிப்பிட்ட இடைவெளியில் போட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து பேரூராட்சி சார்பில் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனவர் சிங்காரவேலு, வனக்காப்பாளர்கள் ஹக்கீம், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் தெற்கு துவக்கப் பள்ளியில் ஆய்வு செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' கூண்டு வைத்தால் இந்த குரங்குகள் பிடிபடாது. எனவே கால்நடை மருத்துவரை கலந்து ஆலோசித்து மயக்க ஊசி செலுத்தி குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.