Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

ADDED : மே 31, 2025 04:54 AM


Google News

வெள்ளி திருடியவர் கைது


ஆர்.எஸ்.புரம், பெரியசாமி ரோட்டை சேர்ந்தவர் கார்த்தி, 45 வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சிவானந்தாகாலனியை சேர்ந்த மலர்விழி, 46 பணியாற்றி வந்தார். கடந்த 29ம் தேதி மாலை, கடையில் யாரும் இல்லாத போது, கடையில் இருந்த 164 கிராம் வெள்ளி தட்டை மலர்விழி திருடினார். இதை கடையில் காவலாளி பார்த்து, கார்த்தியிடம் தெரிவித்தார். கார்த்தி, மலர்விழியை கையும், களவுமாக பிடித்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

லாட்டரி விற்றவர் கைது


சாய்பாபா காலனி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாய்பாபா காலனி சர்ச் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் இடையர்பாளையத்தை சேர்ந்த சந்திரன், 54 என்பதும், கேரளா லாட்டரி சீட்டுகளை வாங்கி, சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுபாட்டில்கள் பறிமுதல்


மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., நேற்று முன்தினம் காலை, வடவள்ளி - சிறுவாணி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சோதனை மேற்கொண்டார். அப்போது, டாஸ்மாக் பார் அருகில், காலை முதலே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 90 பாட்டில்கள் மற்றும் ரூ. 3800 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த ராஜசேகர், 37 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

* இதேபோல் பூமார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, கடை திறப்பதற்கு முன்பே மது விற்பனை நடப்பது தெரியவந்தது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 84 மது பாட்டில்களை, பறிமுதல் செய்தார். மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நவநீத பிரபு, 24 என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கஞ்சா வாலிபருக்கு சிறை


சாய்பாபா காலனி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அன்னை சத்யா நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசாரை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை மடக்கி படித்து விசாரித்த போது, அவர் துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ், 22; கோவை, கோவில்மேடு பகுதியில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருவதாக தெரிவித்தார். அவரிடம் சோதனை செய்த போது, 110 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். முத்துராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குட்கா விற்றவருக்கு சிறை


மளிகைக்கடை மற்றும் பெட்டிக்கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புலியகுளம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கடையில் 960 கிராம் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, மளிகை கடை உரிமையாளர் மோகனை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us