ADDED : ஜூன் 25, 2024 02:11 AM
மேட்டுப்பாளையம்;காரமடை அருகே உள்ள பில்லுார் அணையின் மொத்த உயரம் 100 அடியாகும். அணையில், 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, அணையின் பாதுகாப்பு நலன் கருதி, நிரம்பியதாக அறிவிக்கப்படும்.
அதன்பிறகு அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே நான்கு மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும். கடந்த மூன்று மாதங்களாக மழை ஏதும் பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.
இதனால் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் இம்மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து, 90 அடியை எட்டியது.
அணையில் போதிய நீர் தேக்கம் உள்ளதால், மின்சாரம் உற்பத்தி செய்ய, தண்ணீர் திறந்து விட்டதால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. தினமும் மின்சாரம் உற்பத்தி செய்வதால், அணையில் நீர்மட்டம் குறைந்தது.
நேற்று வினாடிக்கு, 755 கன அடி தண்ணீர் வந்ததால், அணையின் நீர்மட்டம், 90 அடியை எட்டியது. அதனால் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.