ADDED : ஜூன் 15, 2024 01:36 AM

இந்தியாவிலேயே யானை-மனித மோதல் அதிகம் நடக்கும் பகுதி என்று கோவை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக்கோட்டத்தில், 300 கி.மீ., துாரத்துக்கு மலைப்பகுதியை ஒட்டி கிராமங்கள் இருப்பதே, இதற்கு மிக முக்கியக் காரணம். இதற்குத் தீர்வு காண வேண்டிய முக்கியப் பொறுப்பு, தமிழக அரசுக்குக் குறிப்பாக வனத்துறைக்கு உள்ளது.
தற்போது, தமிழக வனத்துறையால் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதில், கோவை வனக்கோட்டத்தில் கல்லார், ஆனைகட்டி மற்றும் வெள்ளியங்கிரி-வால்கரடு-மருதமலை-குருடிமலை ஆகிய மூன்று யானை வழித்தடங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுக்காக பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்படும், நிறைய கட்டடங்கள் இடிக்கப்படும் என்ற தகவல் பரவியுள்ளது.
அத்துடன், மருதமலை, பூண்டி வெள்ளியங்கிரி மற்றும் அனுவாவி சுப்ரமணியர் கோவில்களுக்குச் செல்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்படும் என்ற தகவலும் பரவி, பக்தர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது உண்மையில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தாலும், இதுபற்றிய தெளிவான தகவல்கள், யாருக்குமே தெரியாத நிலை உள்ளது.
அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து, மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அவர்களின் ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகளை ஏற்று, அதன்படி வழித்தடங்களை இறுதி செய்ய, முதல்வர் உத்தரவிட வேண்டுமென்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.