Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு

கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு

கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு

கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு

ADDED : ஜூன் 15, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
கருணாநிதி முதல்வராக இருக்கும்போது, எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரின் வி.ஐ.பி.,க்கள், பல்வேறு அமைப்பினர், பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்பார்; நாளிதழ்களில், அவரது வருகையை முன்னிட்டு, முன் வைக்கப்படும் கோரிக்கைளைக் குறித்து வைத்துக் கொள்வார். அரசு விழா அல்லது கட்சி நிகழ்ச்சி எதில் பங்கேற்றாலும் அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதிலளிப்பார். கடந்த மூன்றாண்டுகளில், கோவைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும்போதெல்லாம், பல்வேறு தொழில், சமூக அமைப்புகளின் நிர்வாகிகளும் அவரைச் சந்தித்து, பல விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் தருகின்றனர்; ஊடகங்களும் பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அவர் எதற்குமே பதில் தராமலும், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமலும் திரும்பிச் செல்வது வாடிக்கையாகவுள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-

கடந்த சட்டமன்றத் தேர்தலில், கோவையில் தி.மு.க.,வுக்கு படுதோல்வி கிடைத்திருந்தாலும், அதற்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல் இரண்டிலுமே, அமோக வெற்றியை இங்குள்ள மக்கள் கொடுத்துள்ளனர்.அப்படியிருக்கையில், இங்குள்ள மக்களின் உணர்வுகளை, தேவைகளை, எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு, அதற்கு நடவடிக்கை எடுப்பது முதல்வரின் முதல் கடமையாகும்.இனியாவது, முதல்வர் ஸ்டாலின் அதைச் செய்வார் என்ற நம்பிக்கையில், இந்த பக்கம் அவர் பார்வைக்கு...!

கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் வரைவு குறித்து, ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் குவிந்துள்ளதால், திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அது நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கோவையைப் பொறுத்தவரை, எதையுமே முழுமையாகச் செய்து முடிக்காமல் அரைகுறையாக விட்டுச் செல்வது, தி.மு.க., அரசுக்கு வாடிக்கையாகி விட்டது.

செம்மொழி மாநாட்டின்போது, காந்திபுரம் மேம்பாலத்தை கருணாநிதி அறிவித்தார். அப்போது வடிவமைக்கப்பட்ட பாலம் மிக அருமையாக, காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பது போன்று, கிராஸ்கட் ரோடு, பாரதியார் ரோடு, நுாறடி ரோடு, சின்னச்சாமி ரோடு ஆகிய இடங்களில் இறங்கு தளம் இருப்பது போல அமைக்கப்பட்டிருந்தது.

பயனற்ற பாலம்


அந்தத் திட்ட அறிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்து, நிதி ஒதுக்கத் தாமதமானதால், அ.தி.மு.க., ஆட்சியில் வடிவம் மாற்றப்பட்டு, இரண்டு பாலங்களாகக் கட்டப்பட்டு, இரண்டாலும் பயனற்ற நிலை காணப்படுகிறது.

மேற்கு புறவழிச்சாலையும் தி.மு.க., அறிவித்து அரசாணை வெளியிட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் அதிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, துாரம் அதிகரிக்கப்பட்டது; அதனால் பாதிப்பு ஏதுமில்லை.

அதேபோல, கடந்த 1994ல் நடைமுறைக்கு வந்து, 2004ல் திருத்தம் செய்யப்பட வேண்டிய கோவை மாஸ்டர் பிளானை கடந்த 2010ல் திருத்தம் செய்ய தி.மு.க.,அரசு அரசாணை வெளியிட்டது; வரைவு வெளியிடப்பட்டு, மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. அதைத் திருத்தம் செய்து, புதிய மாஸ்டர் பிளான் வெளியிடும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

மாஸ்டர் பிளானுக்கு கருத்து


அ.தி.மு.க., ஆட்சியில் பத்தாண்டுகளாக புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பு, கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் கடந்த பிப்., 11ல் கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் வரைவு வெளியிடப்பட்டது. இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டு, ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்ப, ஏப்.,11 வரை 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

பென் டிரைவ், சிடி வடிவிலும் இவை விநியோகிக்கப்பட்டன. அதைப் பார்த்து, கோவையிலுள்ள தொழில், சமூக அமைப்புகள் மற்றும் கட்டுமானத் துறையினர் என பல்வேறு தரப்பினரும், ஏராளமான ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகளைக் குவித்துள்ளனர். அதற்கு மேலும் கால அவகாசம் கோரப்பட்டதால், மே 15 வரை அவகாம் நீட்டித்துத் தரப்பட்டது; அதனால் மேலும் விண்ணப்பங்கள் குவிந்தன.

கோவையுடன் சேர்த்து, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு மாஸ்டர் பிளான் வரைவு வெளியிடப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டன. மற்ற நகரங்களில் 300 என்ற அளவில் மட்டுமே மனுக்கள் வந்துள்ள நிலையில், கோவையில் 3200 ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள், அதாவது 10 மடங்கு கூடுதல் கருத்துகள் வந்துள்ளதாக, நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர்.

எப்போதுதான் முடியும்?


இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில், இத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் ஜூலை 15க்குள், இந்தப் பணி முடிந்து திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு எவ்வளவு நாளாகும்; அரசு அதற்கு ஒப்புதல் அளித்து, புதிய மாஸ்டர் பிளானை வெளியிட எவ்வளவு காலமாகும் என்பதை யூகிக்கவே முடியவில்லை.

கடந்த 30 ஆண்டுகளில், மூன்றாவது பெரிய நகரமாக இருந்த கோவை, இப்போது இரண்டாவது பெரிய நகரம் என்ற அளவுக்கு அபரிமிதமாக வளர்ந்துள்ளது.

ஆனால் மாஸ்டர் பிளான் புதுப்பிக்கப்படாத காரணத்தால், நில உபயோக மாற்றம் பெரும்பிரச்னையாகியுள்ளது.

நிலப்பயன்பாடு பிரச்னைகள் மட்டுமின்றி, திட்டச்சாலைகள், இணைப்புச்சாலைகள், வளர்ச்சித் திட்டங்கள் என எல்லாமே, மாஸ்டர் பிளான் புதுப்பிக்கப்படாததால், தடைபட்டு நிற்கின்றன.

எனவே, தமிழக முதல்வர் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானை வெளியிட்டு, நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவே முதல்வரிடம் கோவை மக்கள் எதிர்பார்க்கும், முன் வைக்கும் முதல் கோரிக்கையாகும்!

இப்போது வரை இழுபறி!

சென்னைக்கு அடுத்ததாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில், கோவை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், சென்னையை விட கோவையில் வீடுகள் விற்பனை விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.ஆனால் லே அவுட் மற்றும் கட்டுமானங்களுக்கு திட்ட அனுமதி பெறுவதற்கு அதீதமான லஞ்சம் தர வேண்டியுள்ளது; தந்தாலும் அசாத்தியமான தாமதம் ஏற்படுகிறது.இதற்குத் தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் போலவே, கோவையிலும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (சி.யு.டி.ஏ.,) துவக்குவதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வெளியிடப்பட்டது.அதற்கான ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் நியமிக்கப்பட்டார். எந்த வேலையுமே நடக்காமல், அவரும் மாற்றப்பட்டார்; அதன்பின் அது என்னவானது என்றே தெரியவில்லை. இந்த ஆணையம் அமைப்பதற்கும், கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமாகவுள்ளது.கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக, இந்தத் துறையின் அமைச்சர் முத்துசாமி இருந்தாலும், இந்த இரண்டு விஷயங்களும் இவ்வளவு கால தாமதம் ஆவதற்கான காரணம்தான் புரியாத புதிராகவுள்ளது.இரண்டுமே நடக்காவிட்டால், எதிர்க்கட்சிகள் சொல்வது போல, இது அறிவிப்பு அரசு என்பது உறுதியாகி விடும்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us