/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிராமப்புற மக்களுக்கு மினி பஸ் சேவை...கிடைக்குமா? வழித்தடத்தை அரசே இறுதி செய்ய வேண்டும் கிராமப்புற மக்களுக்கு மினி பஸ் சேவை...கிடைக்குமா? வழித்தடத்தை அரசே இறுதி செய்ய வேண்டும்
கிராமப்புற மக்களுக்கு மினி பஸ் சேவை...கிடைக்குமா? வழித்தடத்தை அரசே இறுதி செய்ய வேண்டும்
கிராமப்புற மக்களுக்கு மினி பஸ் சேவை...கிடைக்குமா? வழித்தடத்தை அரசே இறுதி செய்ய வேண்டும்
கிராமப்புற மக்களுக்கு மினி பஸ் சேவை...கிடைக்குமா? வழித்தடத்தை அரசே இறுதி செய்ய வேண்டும்
ADDED : ஜூன் 21, 2024 02:29 AM

கோவை:கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி சென்றடைய, மினி பஸ் வழித்தடங்களை, வட்டார போக்குவரத்து துறையினர் இறுதி செய்து, அதற்கேற்ப 'பெர்மிட்' வழங்க வேண்டும். இல்லையெனில், வருவாய் அதிகமுள்ள பகுதிகளுக்கு மட்டுமே மினி பஸ் இயக்க போட்டி உருவாகும்; மற்ற கிராமப்புற பகுதிகள் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது.
கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1997ல் மினி பஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. நகருக்கு அருகாமையில் கிராமங்களில் வசிப்போர் நகரப் பகுதிக்கு வந்து சென்றனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், நாளடைவில் இச்சேவை படிப்படியாக குறைந்தது.
இத்திட்டத்துக்கு தற்போது மீண்டும் உயிர் கொடுக்கப்படுகிறது. இதற்கு முன், 20 கி.மீ., துாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது, 25 கி.மீ., துாரத்துக்கு மினி பஸ் இயக்க அனுமதி தரப்படும்; அதில், 18 கி.மீ., சேவை இல்லாத வழித்தடத்திலும், 7 கி.மீ., சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்படும்.
அனைத்து பஸ்களிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும்; எத்தனை பஸ்களுக்கு அனுமதி வழங்குவது என்பதை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முடிவு செய்வர் என தமிழக அரசு கூறியிருக்கிறது. இத்திட்டம் தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் அனுப்பவும் போக்குவரத்து துறை கோரியிருக்கிறது.
இதுதொடர்பாக, போக்குவரத்து துறை மண்டல இணை ஆணையர் சிவக்குமரனிடம் கேட்டதற்கு, ''மினி பஸ் இயக்க விரும்புவோர், வழித்தடத்தை அடையாளம் கண்டு, விண்ணப்பிக்க வேண்டும்.
பஸ்களை ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும். தகுதியான பஸ்களா என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரிபார்ப்பர். மக்களுக்கு பயனுள்ள வழித்தடமாக இருப்பின் 'பெர்மிட்' வழங்கப்படும்; அதன்பின், மினி பஸ் இயக்கலாம். எந்த ஊரில் வசிப்பவராக இருந்தாலும், எந்த வழித்தடத்துக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.
இத்தகைய நடைமுறையை பின்பற்றினால், தொலைதுாரத்தில் உள்ள, வருவாய் அதிகம் ஈட்ட முடியாத குக்கிராம பகுதிகளுக்கு மினி பஸ் இயக்க, முன்வருவது சாத்தியமில்லை. அரசு போக்குவரத்து கழகத்துடன் வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து, மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் 'ரூட்' (வழித்தடங்கள்) உருவாக்க வேண்டும்.
அனைத்து வழித்தடங்களுக்கும் மினி பஸ் சேவை சென்றடையும் வகையில், 'பெர்மிட்' வழங்க வேண்டும். இல்லையெனில், அனைத்து கிராம மக்களுக்கும் இச்சேவை சென்றடையாது. நகரப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்போருக்கு மட்டுமே மினி பஸ் வசதி கிடைக்கும். இவ்வசதி அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை போக்குவரத்து துறையினர் உறுதி செய்யும் வகையில், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.