/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையை 'பெஞ்ச் மார்க்' ஆக உருவாக்கப் போறோம்! ஜவுளித்துறையினர் சபதம் கோவையை 'பெஞ்ச் மார்க்' ஆக உருவாக்கப் போறோம்! ஜவுளித்துறையினர் சபதம்
கோவையை 'பெஞ்ச் மார்க்' ஆக உருவாக்கப் போறோம்! ஜவுளித்துறையினர் சபதம்
கோவையை 'பெஞ்ச் மார்க்' ஆக உருவாக்கப் போறோம்! ஜவுளித்துறையினர் சபதம்
கோவையை 'பெஞ்ச் மார்க்' ஆக உருவாக்கப் போறோம்! ஜவுளித்துறையினர் சபதம்
ADDED : ஜூன் 21, 2024 02:18 AM

கோவை:''தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கூறுவதை காட்டிலும், கோவைக்கான அடையாளத்தை உருவாக்க நினைக்கிறோம். ஜவுளித்துறையில், 'கோவையை ஒரு பெஞ்ச் மார்க்' ஆக உருவாக்க முயற்சித்து வருகிறோம்,'' என, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன் கூறினார்.
ஜவுளித்துறையின் தற்போதைய சூழல் குறித்து, சுந்தரராமன் மேலும் கூறியதாவது:
ஜவுளித்துறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமான பிரச்னைகள் இருக்கும். 20 - 30 ஆண்டு கால வரலாற்றை ஒப்பிட்டுப் பார்த்தால், நன்றாக செயல்படக்கூடிய மில்களும் இருக்கும்; சில மில்கள் மூடப்பட்டு வரும். கொரோனா பரவலுக்கு பின், 14 மாத காலத்துக்கு வளர்ச்சி நன்றாக இருந்தது. 24 மாதங்களுக்கு இயந்திரங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் 'புக்கிங்' இருந்தது. தற்போது, 16 - 18 மாதங்களாக இறங்கு முகம் காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இது, 'சைக்கிள் இன்டஸ்ட்ரீ'. நம்முடைய திறமையை மேம்படுத்தினால் மட்டுமே சமாளிக்க முடியும்.
ஆடைகள் ஏற்றுமதி, 2023-24ல் குறைந்திருந்தது. அமெரிக்காவில் தேவைக்கு அதிகமாக இறக்குமதி செய்திருந்தனர். ஐரோப்பிய நாடுகளில் போர் உள்ளிட்ட காரணங்களால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. மூலப்பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு ஒரு காரணம். மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்து இருந்தனர். இதன் காரணமாக, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் கொண்டு வந்து தயாரித்துக் கொடுக்க, இந்திய ஏற்றுமதியாளர்களால் முடியவில்லை.
தற்போதைய நிதியாண்டில் (2024-25) ஒட்டுமொத்த டெக்ஸ்டைல் 6 சதவீதம் ஏற்றுமதி அதிகமாகியுள்ளது. 'அப்பேரல் எக்ஸ்போர்ட்' 1 சதவீதம் குறைவாக இருக்கிறது. நடப்பாண்டு ஜவுளித்துறை வளர்ச்சி அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்.
வாய்ப்புகள் இருக்கு
இன்றைய தினம் ஜவுளி வர்த்தகம் இல்லாமல் இல்லை; வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கூறுவதை காட்டிலும், கோவைக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டுமென நினைக்கிறோம். மதிப்பு கூட்டுதல், புதிய பிராண்ட் கொண்டு வரும் பணியை நுாற்பாலைகள் செய்தாக வேண்டும்.
பழைய துணிகளை அரைத்து, நுாலாக்கி தயாரிக்கும் ஜவுளிக்கு உலக அளவில் வரவேற்பு இருக்கிறது. ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன; அதை தக்க வைப்பதற்கான நம்பிக்கை இருக்கிறது. 'கோவையை ஒரு பெஞ்ச் மார்க்' ஆக உருவாக்க வேண்டும். அடுத்த, 100 ஆண்டுகளில், கோவையை போல் இருக்க வேண்டுமென நினைக்க வேண்டும். உயர் தரம் வாய்ந்த பருத்திக்கு, தமிழக அளவிலோ அல்லது கொங்கு மண்டல அளவிலோ 'பிராண்ட்' கொண்டு வந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருள் சப்ளை செய்ய நினைக்கிறோம்.
கொள்கையில் மாற்றம்
ஜவுளித்துறை வளர்ச்சியை அதிகரிக்க, பருத்தி விளைச்சலை இரட்டிப்பாக்க வேண்டும். அண்டை நாடுகளில் இருந்து மூலப்பொருட்களை தருவித்து, போட்டியை சமாளிக்க முடியாது. இந்திய ஜவுளித்துறைக்கு தேவையான பருத்தி விலை, 10 சதவீதம் குறைவாக இருந்தால், நம்மை யாராலும் பிடிக்க முடியாது. ஜவுளிக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்ய கோரியுள்ளோம்.
மலிவு விலையில் மூலப்பொருட்கள் கிடைத்தால் தொழில் வளர்ச்சி அடையும்.
தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்காவிட்டாலும், உயர்த்தக் கூடாது என கோரி வருகிறோம். அரசு தரப்பில் எங்களுடன் கலந்துரையாடுகின்றனர். இதுவரை நாங்கள் எதிர்பார்த்த 'ரிசல்ட்' வரவில்லை. மின் கட்டண உயர்வை தொழில்துறை தாங்காது என்பதை கூறியிருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.