/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் பாரம்பரிய பழக்கங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் பாரம்பரிய பழக்கங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் பாரம்பரிய பழக்கங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் பாரம்பரிய பழக்கங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் பாரம்பரிய பழக்கங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2024 12:13 AM

சூலுார்;நமது நாட்டின் பாரம்பரிய பழக்கங்களை பின்பற்றினால், நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தை பெறலாம்,' என, எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் அறிவுறுத்தி பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், மாதந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி, விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத் குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை பாரதியார் பல்கலையின் ஆட்சி பேரவை உறுப்பினரும், எழுத்தாளருமான ஆதலையூர் சூரியகுமார், நாம் கடைபிடிக்கும் சம்பிரதாயங்களில் மறைந்திருக்கும் அறிவியல் பின்னணி என்ற தலைப்பில் பேசியதாவது:
நமது நாட்டில், நாம் காலங்காலமாக பின்பற்றி வரும், அன்றாட சடங்குகளில் ஆயிரக்கணக்கான அறிவியல் உண்மைகள் மறைந்துள்ளன. அந்த அறிவியல் உண்மைகளின் தன்மைகளை அறியாமல் பின்பற்றுவதால், அவை மூட பழக்க வழக்கங்கள் என்று சிலர் புறக்கணிக்கின்றனர். ஆனால், நம்முடைய பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமானவை.
உதாரணங்கள் ஏராளமாக உள்ளன. ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது குடல் இறக்க நோய் வராமல் தடுக்க உதவுகிறது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம், என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். எதற்காக அவ்வாறு கூறினார்கள் என, சிந்திக்க வேண்டும்.
இடி, மின்னலின் போது, கோவிலின் கோபுர கலசங்கள், அவற்றை தாங்கி கொண்டு அவ்வூர் மக்களை காப்பாற்றும். நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் பூசினால், உடலில் உள்ள சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரும். பெண்கள் பூச்சூடினால், இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். வளையல்கள் அணிவதால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
அரச மரத்தையும், வேப்ப மரத்தையும் சுற்றினால், கருப்பையில் இருக்கும் கிருமிகள் நீங்கும். அதனால், கர்ப்பம் தரிக்கும் தன்மையை கருப்பை பெறுகிறது. இதை பின்பற்றினால், செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாட வேண்டிய நிலை வராது.
இதுபோல், நாம் பின்பற்றும் ஒவ்வொரு பழக்கத்துக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. இதனால், ஆரோக்கியமான வாழ்க்கையையும், நீண்ட ஆயுளையும் பெறலாம். இவற்றை வாழும் தலை முறையும் அறிந்து கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.