/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கடைகளில் இருப்பு விபரம் காட்சிப்படுத்த வலியுறுத்தல் ரேஷன் கடைகளில் இருப்பு விபரம் காட்சிப்படுத்த வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் இருப்பு விபரம் காட்சிப்படுத்த வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் இருப்பு விபரம் காட்சிப்படுத்த வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் இருப்பு விபரம் காட்சிப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 11:36 PM
பொள்ளாச்சி:ரேஷன் கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கடைகளில் பொருட்களின் இருப்பு விபரத்தை காட்சிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தாலுகாவில், 147 ரேஷன் கடைகள் உள்ள நிலையில், 1.33 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் குறைந்த விலையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, இரு மாதங்களாக இப்பொருட்கள் கிடைக்கப்பெறாமல் கார்டுதாரர்கள் தவித்து வருகின்றனர்.
ஒரு சில கடைகளில் மட்டும், மே மாத ஒதுக்கீடு ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டது. ஜூன் மாதத்திற்கான பருப்பு இன்னும் வழங்கப் படாமல் உள்ளது. இதனால், ரேஷன் கடைக்குச் செல்லும் கார்டுதாரர்கள், பருப்பு, பாமாயில் கிடைக்காமல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
பெரும்பாலான ரேஷன் கடைகளில், வழங்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் மற்றும் கையிருப்பு பொருட்களின் விபரம் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்காமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.
மக்கள் கூறியதாவது:
சில ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமே பொருட்களின் இருப்பு விபரம் குறித்து பதில் அளிக்கின்றனர். பலர், முறையாக பதில் அளிப்பதில்லை. எனவே, கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ரேஷன் கடைகளில், பொருட்களின் இருப்பு விபரத்தை அறிவிக்க வேண்டும்.
அறிவிப்பு பலகைகளில், ரேஷன் கடையின் வேலை நேரம், ஆரம்ப இருப்பு மற்றும் இறுதி இருப்பு உள்ளிட்ட விபரங்களை தினமும் எழுதி வைக்க துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, பொருட்கள் வழங்கப்படும் அளவு மற்றும் அவற்றின் விற்பனை விலை குறித்த தகவலும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். அப்போது தான், ரேஷன் கடைக்கு வரும் கார்டுதாரர்கள், அறிவிப்பைப் பார்த்து வாக்குவாதத்தில் ஈடு படாமல் திரும்பிச் செல்வர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.