/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விடா முயற்சியுடன் 'நீட்' தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள் விடா முயற்சியுடன் 'நீட்' தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
விடா முயற்சியுடன் 'நீட்' தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
விடா முயற்சியுடன் 'நீட்' தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
விடா முயற்சியுடன் 'நீட்' தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூன் 08, 2024 12:10 AM

பொள்ளாச்சி:நீட் தேர்வு கடினம். ஏழை மாணவர்களால் சாதிக்க முடியாது என்ற பொதுக்கருத்தை உடைத்து சாதித்துக் காட்டியுள்ளனர் கோவை மாவட்டத்திலுள்ள, அரசுப்பள்ளி மாணவ, மாணவியர். ஏழ்மையைப் புறம்தள்ளி, விடாமுயற்சியால் நல்ல மதிப்பெண்பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் நடந்த நீட் தேர்வில், கோவை மாவட்டத்தில், 7,128 பேர் தேர்வு எழுதினர். இதில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 391 பேர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 224 பேர். அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற 281 பேர் தகுதியுடைவர்கள்.
கோவை மாவட்ட அளவில் அரசுப்பள்ளி மாணவர்களில் மலுமிச்சம்பட்டி அரசுப் பள்ளி மாணவர் விக்ரமன் 555 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவர், ஏற்கனவே 'நீட்' எழுதி போதிய மதிப்பெண் பெறாமல், அடுத்த முயற்சியில் 555 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.
ஒத்தக்கால் மண்டபம் அரசுப்பள்ளி மாணவி தேசிகா 454, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யா 413, கிணத்துக்கடவு முத்துக்கவுண்டன்புதூர் அரசுப்பள்ளி மாணவர் தருண் 402, பொள்ளாச்சி கஞ்சம்பட்டி அரசுப் பள்ளி மாணவி அருள் அபிநயா 400, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி ஸ்வேதா 400 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.
கோவை, அரசு மாடல் பள்ளி மாணவர் மிதிலன் 512 மதிப்பெண்களும், தர்ஷனா ஸ்ரீ 457 மதிப்பெண்களும், அக் ஷயா 434 மதிப்பெண்களும் பெற்று சாதித்துள்ளனர்.
சாதித்த 'பெயின்டர்' மகன்
அரசு மாடல் பள்ளி மாணவர் மிதிலன் 'நீட்' தேர்வில் 512 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மிதிலனின் தந்தை பெயின்டராக உள்ளார். தாய் தனியார் நிறுவன பணிக்குச் செல்கிறார். ஏழைக் குடும்பம். தான் சாதித்தது குறித்து மிதிலன் கூறியதாவது:
ஏழைக்குடும்பம் எங்களுடையது. சின்னியம்பாளையம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும்போது, மாடல் பள்ளியில் படிக்க வாய்ப்பு வந்தது. இயற்பியல், வேதியியலில் எனக்கு ஆர்வம் இருந்தது.
உயிரியல்தான் கடினமாக இருந்தது. பொதுத்தேர்வுக்கு முக்கியத்துவம் அளித்து படித்தாலும், 'நீட்' தேர்வுக்கு அரசு உதவியுடன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுப் படித்தேன்.
உயிரியல் பாடத்துக்கு ஆசிரியர்கள் வழிகாட்டினர். என்.சி.இ.ஆர்.டி., புத்தகத்தில் உயிரியலுக்கு தயார் செய்தேன். உண்மையில், பொதுத்தேர்வுக்குப் பிறகு 30 நாள் விடுப்பில் தீவிரமாக பயிற்சி செய்து தேர்வு எழுதினேன். நல்ல மதிப்பெண் கிடைத்திருக்கிறது.
தந்தையும், தாயும் பட்டதாரிகள் அல்ல. குடும்பத்தில் நான் தான் முதன்முதலில் டாக்டராகப் போகிறேன். முயற்சி செய்தால் வறுமை ஒரு பொருட்டே அல்ல.
இவ்வாறு மிதிலன் தெரிவித்தார்.
வீட்டுக்கு வரவழைத்து சொல்லிக் கொடுத்த ஆசிரியர்
402 மதிப்பெண்கள் எடுத்துள்ள தருண் கூறுகையில், ''சொந்த ஊர் கண்ணமநாயக்கனுார். அப்பா, தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். அம்மா, கூலி வேலைக்குச் செல்கிறார். கிணத்துக்கடவு முத்துக்கவுண்டன்புதுார் அரசுப் பள்ளியில் படித்தேன். ஏழ்மையான குடும்பம். புத்தகம் வாங்கக்கூட காசு இல்லை. ஆசிரியர் தேவிகா புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ஊக்குவித்தார்.
ஆசிரியர் ராஜூ பள்ளி விட்டதும், வீட்டுக்கு அழைத்துச் சென்று சொல்லிக்கொடுத்தார். எனக்காக அவர்கள் பெருமுயற்சி எடுத்தனர். 'நீட்' தேர்வுக்காக தனியாக பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் வீட்டில் இருந்தே 'நீட்' தேர்வுக்கு தயாரானேன்.
முதல் முயற்சியிலேயே, 402 மதிப்பெண்கள் பெற்றது மகிழ்ச்சி. எந்தக் கல்லுாரியில் சீட் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். படித்து டாக்டராகி விட வேண்டும். அதுதான் லட்சியம்,'' என்றார்.
இவர்கள் மட்டுமல்ல, பொள்ளாச்சி நகராட்சி அரசுப் பள்ளி மாணவியர் ரம்யா, ஸ்வேதா இருவரும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். ரம்யாவின் தந்தை எண்ணெய் கடையில் வேலை பார்க்கிறார். ஸ்வேதாவின் தந்தை கட்டடத் தொழிலாளி. கடந்த ஆண்டு 'நீட்' தேர்வில் போதிய மதிப்பெண் பெறவில்லை.
தனியார் பயிற்சி வகுப்புக்குச் செல்ல வசதி இல்லை. வீட்டில் இருந்தே தயாராயினர். ஆசிரியர் சுதா, தினமும் மாலையில் இருவரையும் பள்ளிக்கு வரவழைத்து , கற்றுக் கொடுத்துள்ளார். புத்தகங்கள் வாங்கிக்கொடுத்து உதவியிருக்கிறார். தவிர, இருவரும் வீட்டில் யூ டியூப்பில் நீட் தொடர்பான வீடியோக்களைப் பார்த்து கற்றுக்கொண்டு, தொடர் முயற்சியாக நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். இது, இவர்களின் விடா முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
முயன்றால் 'நீட்' தேர்வில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு சிறு உதாரணம்தான் இவர்கள்.