/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை பிரச்னைக்கு தீர்வே இல்லையா! தேங்கும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் குப்பை பிரச்னைக்கு தீர்வே இல்லையா! தேங்கும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
குப்பை பிரச்னைக்கு தீர்வே இல்லையா! தேங்கும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
குப்பை பிரச்னைக்கு தீர்வே இல்லையா! தேங்கும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
குப்பை பிரச்னைக்கு தீர்வே இல்லையா! தேங்கும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 08, 2024 12:07 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில் தேங்கும் குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழல் உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், வணிக வளாகங்கள் அதிகளவு நிறைந்து, வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
அரசு உத்தரவுப்படி, துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. தற்போது, நகராட்சியில், 69 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 143 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் (இரண்டு ஒப்பந்ததாரர்கள்) வாயிலாக குப்பை சேகரிக்கப்படுகிறது.
நகராட்சி நிரந்தர துாய்மை பணியாளர்கள், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கால்வாய் துார்வாருதல், புதர்களை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நகரில் குப்பை துார்வாருதல், சாக்கடை கால்வாய் துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடக்கின்றன.நகரத்தில் ஆங்காங்கே, மூட்டை, மூட்டையாக குப்பை தேங்கி கிடக்கிறது.
அதில், பொள்ளாச்சி பாலகோபாலபுரம் பள்ளிக்கு எதிரே மூட்டை, மூட்டையாக கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும், இதுவரை பலன் இல்லை.
இந்நிலையில், நகராட்சி, 36வது வார்டுக்கு உட்பட்ட ஏ.வி.வி.எஸ்., காலனியில் வாகனங்களில் குப்பையை கொண்டு வந்து, நகராட்சி ஊழியர்கள் கொட்டுவதாகவும், அவற்றுக்கு சில நேரங்களில் தீ வைத்து எரிப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து நடவடிக்கை இல்லை.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நகராட்சி பகுதியில் துாய்மை என்ன விலை என, கேட்கும் அளவுக்கு ஆங்காங்கே மூட்டை, மூட்டையாக குப்பை குவிந்து கிடக்கின்றன. தேங்கும் கழிவுகள் பல நாட்கள் எடுக்காமல் விடுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பின்புறத்தில், குவிக்கப்படும் குப்பைகளுக்கு அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். அங்கு நகராட்சி ஊழியர்களே குப்பை கொட்டுகின்றனர்; ஒரு சிலர் அப்பகுதியை இயற்கை உபாதைகள் கழிக்குமிடமாக மாற்றி வருவதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜோதிநகர் அருகே ஏ.வி.வி.எஸ்., காலனியில், கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டுவதால் அங்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகும் சம்பவங்கள் நடந்தாலும், குப்பை பிரச்னைக்கு தீர்வு இல்லாத நிலையே தொடர்கிறது.
உயர் அதிகாரிகள் கண்காணித்து, ஒப்பந்தம் எடுத்தவர்களிடம் முறையாக அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.